யார் இந்த ஆரிஸ் கான்... கைதானது எப்படி? - டெல்லி குண்டுவெடிப்பின் பின்னணி!

ஆரிஸ் கான்

டெல்லியில் 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கியத் தீவிரவாதி ஆரிஸ் கான் எனப்படும் ஜுனைட்-ஐ, போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

டெல்லி குண்டுவெடிப்பு தவிர மேலும் மூன்று குண்டுவெடிப்புச் சம்பவங்களில் ஆரிஸ் கானுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதுவரை 165 பேர் பலியாவதற்குக் காரணமான தீவிரவாதி என்று தெரிய வந்துள்ளது. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர் இவர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பொறியியல் பட்டதாரியான ஆரிஸ் கான், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர் என்றும், வெடிகுண்டுகள் செய்வதில் வல்லுநர் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 32 வயதான அவர், பல ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த நிலையில், இந்திய - நேபாள எல்லையில் டெல்லி காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். ஏற்கெனவே அவரின் 15 லட்ச ரூபாய் சன்மானம் கொடுக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

2007-08 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு ஆரிஸ் கான் காரணமாக இருந்துள்ளார். 

2008-ம் ஆண்டுக்குப் பிறகு, நேபாளம் சென்று தலைமறைவான கான், அங்கு ஒரு பள்ளியில் ஆசிரியராகவும், ஓட்டலிலும் பணியாற்றி வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

டெல்லி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, பட்லா ஹவுஸ் பகுதியில் 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி பதுங்கி இருந்த இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளை போலீஸார் முற்றுகையிட்டுத் தாக்குதல் நடத்தினர். அப்போது, இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்; இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் பதுங்கியிருந்த, ஆரிஸ் கான் தப்பி ஓடிவிட்டார். அந்தச் சண்டையின்போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மா தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். டெல்லியில் அதே ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அதையடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த மோதல் ஏற்பட்டது. 

ஆரிஸ் கான் யார்?

ஆரிஸ் கான்ஆரிஸ் கான் கைதுசெய்யப்பட்டிருப்பது பற்றி டெல்லி போலீஸ் துணை ஆணையர் குஷ்வாகா கூறுகையில், ''ஒன்பது ஆண்டுகளுக்கும் மேல் தேடப்பட்டு வந்த தீவிரவாதி ஆரிஸ் கானை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் அஸம்கார் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இவர், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். டெல்லியிலிருந்து நேபாளத்திற்குத் தப்பியோடிய அவர், தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியிருப்பது தெரிய வந்துள்ளது" என்றார்.

டெல்லி கொண்டு வரப்பட்ட ஆரிஸ் கான், அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு மட்டுமல்லாது, வாரணாசி, ஜெய்ப்பூர், ஆமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களிலும் இவருக்குத் தொடர்பு இருந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்திலிருந்து உத்தரப்பிரதேச மாநிலத்திற்குத் தன் கூட்டாளியைச் சந்திப்பதற்கு ஆரிஸ் கான் வருவதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, டெல்லி போலீஸார் விரைந்து சென்று கைது செய்ததாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைமறைவான இந்தியன் முஜாஹிதீன் மற்றும் 'சிமி' அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், நேபாளத்தில் தளம் அமைத்துச் செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வேலையில்லாத இளைஞர்களை தங்கள் அமைப்புக்குச் சேர்க்க முயல்வதாகவும் கிடைத்த தகவலின் பேரிலேயே ஆரிஸ் கான் கைது செய்யப்பட்டதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. நேபாளத்திலிருந்து இந்திய எல்லைப்பகுதியான பன்பாஸா என்ற இடத்தில் வந்தபோது போலீஸார் அவரைக் கைது செய்தனர். ஆரிஸ் கானின் குடும்பத்தினர், அஸம்கார் பகுதியிலேயே தொடர்ந்து வசித்து வருகின்றனர். டெல்லியின் கிழக்குப் பகுதியில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த மற்றொரு முக்கியத் தீவிரவாதியான அப்துல் சுபான் குரேஷியை போலீஸார் அண்மையில் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில், இந்திய ராணுவ முகாம்கள் மீதும், எல்லையோர கிராமங்களில் உள்ள குடியிருப்புகளிலும் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளும் தாக்குதலை நடத்திவரும் நிலையில், இதுபோன்று முக்கியக் குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!