வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (16/02/2018)

கடைசி தொடர்பு:19:31 (16/02/2018)

தீவிரவாதிகள் ஊடுருவ திட்டம்: காஷ்மீர் எல்லையில் என்ன நடக்கிறது?

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்

யங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் நோக்கத்துடன் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானிலிருந்து சுமார் 400 தீவிரவாதிகள் நுழைய திட்டமிட்டிருப்பதாக ராணுவ உயர் அதிகாரி தெரிவித்தார். வடக்குப் பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி தேவராஜ் அன்பு கூறுகையில், ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டதாக தெரிவித்தார்.

ஜம்மு அருகே சஞ்சுவான் பகுதியிலுள்ள ராணுவ முகாமுக்குள் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், கடந்த சனிக்கிழமை புகுந்து குடியிருப்புப் பகுதிகளில் பதுங்கி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்தக் குடியிருப்பை சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்திய ராணுவத்தினர், தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதிகாரிகள் இரண்டுபேர் உள்பட ராணுவத்தினர் ஆறுபேரும் பொதுமக்கள் தரப்பில் ஒருவரும் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இதையடுத்து சி.ஆர்.பி.எஃப் முகாமிற்குள் கடந்த இரு தினங்களுக்கு முன் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகளை தடுக்க முயன்ற வீரர் ஒருவர் சுடப்பட்டு உயிரிழந்தார். அந்தத் தீவிரவாதிகள், அருகிலிருந்த பழைய வீடு ஒன்றில் புகுந்தனர். பாதுகாப்புப் படையினர் அவர்களை சுற்றிவளைத்து, தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

எல்லைப்பகுதியில் இதுபோன்றத் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. ராணுவ முகாம் பகுதியிலும், குடியிருப்புப் பகுதியிலும் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவும் தீவிரவாதிகள், ராணுவத்தினரையும், பொதுமக்களையும் கொன்று வருகிறார்கள். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் உள்ள இந்திய ராணுவத்தின் வடக்குப் பிராந்திய துணைத் தளபதி தேவராஜ் அன்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் உள்ளது. 

ராணுவ அதிகாரி தேவராஜ் அன்பு"இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்தும் சதித்திட்டத்துடன் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவ எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டருகே தீவிரவாதிகள் தயாராக உள்ளனர். இமயமலைப் பகுதியில் உள்ள பீர் பஞ்சால் மலைத்தொடரின் தெற்குப் பகுதியில் சுமார் 220 பேர் வரையும், வடக்குப் பகுதியில் 190 முதல் 220 பேர் வரையும் நம் நாட்டுக்குள் ஊடுருவக் காத்திருக்கின்றனர். ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு நேரடிப் பங்கு உள்ளது. சஞ்சுவான் ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய பகுதிகளில் இயங்குவது சிக்கலானதும், சவாலானதும் ஆகும். பழிக்குப்பழி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் நமக்கான உத்தியை வகுக்கிறோம். பாகிஸ்தான் ராணுவத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்திய எல்லையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை ராணுவம் தொடர்ந்து எடுத்து வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் மட்டுமன்றி நமது அண்டை நாடுகளிலும் தீவிரவாதச் செயல்களை ஊக்குவிப்பதில் பாகிஸ்தானும், ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புகளும் நேரடியாக ஈடுபட்டுள்ளன. ஐ.எஸ்.ஐ அமைப்பின் ஆதரவு, பயிற்சி, உத்தி ஆகியவை இல்லாமல் தீவிரவாதம் இவ்வளவு காலத்துக்கு நீடிக்க முடியாது. எல்லையில் இந்திய ராணுவத்தை நேருக்கு நேர் சந்திக்க முடியாத விரக்தியில் பாகிஸ்தான் மறைமுகமாக இதுபோன்ற தீவிரவாதத் தாக்குதல்களை ஊக்குவித்து வருகிறது." என்றார் அவர். 

இதற்கிடையே பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள், இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் உளவுப் பிரிவுத் தலைவர் டான் கோட்ஸ் தெரிவித்தார்.

இதுபோன்ற சூழ்நிலையில், அண்மையில் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதல்வர் மெஹ்பூபா முஃப்தி, "பாகிஸ்தானுடன் இந்தியா அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்போதுதான் ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்" என்று பேசினார். 

பாகிஸ்தான் மண்ணிலிருந்து தீவிரவாதிகளை வேரோடு அகற்ற வேண்டும் என்றும், அதுவரை அந்நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் இந்தியா ஏற்கெனவே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 

எல்லைப்பகுதியில் நீடித்து வரும் பதற்றம் முடிவுக்கு வந்தால் மட்டுமே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா உள்ளிட்ட தொழில்கள் முன்னேற்றமடையும். அதனை எதிர்நோக்கி அம்மாநில மக்கள் உள்ளனர் என்பது உறுதி...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்