வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (16/02/2018)

கடைசி தொடர்பு:19:40 (16/02/2018)

`சம்ஸ்கிருதத்தைவிட பழைமையானது தமிழ் மொழி!' - பிரதமர் மோடியின் 'தமிழ்ப் பாசம்'

டெல்லி டல்கோட்ரா விளையாட்டு அரங்கில் ‘பரீக்‌ஷா பே சர்ச்சா’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார். 

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நெருங்கி வருவதால், மாணவர்கள் மன அழுத்தத்தைத் தவிர்த்து, பொதுத் தேர்வுகளை எவ்வாறு தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது என நரேந்திர மோடி மாணவர்களிடம் உரையாடினார். 

“சி.பி.எஸ்.சி மற்றும் மாநிலப் பள்ளி மாணவர்கள் மத்தியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சியில், கடினமாக உழைத்தால் மட்டுமே தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியும். தெய்வத்தின் அருள் கிடைத்தாலும், உங்களை நீங்கள் நம்பாவிட்டால், தேர்வில் வெற்றி பெறுவது கடினம். அதனால், மன அழுத்தத்தை வென்று உங்களை நம்புங்கள், உங்கள் உழைப்பை நம்புங்கள்” எனக் கூறினார் மோடி. 

மேலும், ``பல்வேறு மாநிலத்திலிருந்து வந்திருக்கும் மாணவர்களிடம் மொழிப் பிரச்னையால் சரியாக உரையாட முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்கிறேன்” என்றார். அத்துடன், சம்ஸ்கிருதத்தைவிடவும் பழைமையான மொழி ‘தமிழ்’ என்றும் அத்தகைய அழகான மொழியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் மோடி மாணவர்களிடையே பேசினார்.