வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (17/02/2018)

கடைசி தொடர்பு:15:20 (17/02/2018)

``இறுதிச்சடங்குக்குப் பணமில்லை!’’ - 21 வயது மகனின் உடலைத் தானம்செய்த ஏழைத் தாய்

 சத்தீஸ்கர் மாநிலத்தில், விபத்தில் சிக்கி உயிரிழந்த மகனின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப் பணமில்லாததால், உடலைத் தானமாக வழங்கிய நிகழ்வு நடந்துள்ளது. 


சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாமன். 21 வயதான அவர், கடந்த திங்கள்கிழமை நடந்த விபத்தில் படுகாயமடைந்தார். உள்ளூர் மருத்துவமனைகளில் முதலுதவி செய்யப்பட்ட பின்னர், ஜக்தல்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 15-ம் தேதி உயிரிழந்தார். பாமனின் உடலை, சொந்த ஊருக்குக் கொண்டுசெல்ல முடியாமல் அவரது தாய் தவித்தார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அந்த தாயிடம் மகனின் இறுதிச் சடங்கைச் செய்வதற்குப் பணமில்லை. மகனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச்சென்று இறுதிச் சடங்குகள் செய்வதற்காக மருத்துவமனையில் இருந்த பலரிடமும் அவர் உதவி கேட்டுப் பார்த்திருக்கிறார். ஆனால், அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்று தெரிகிறது.

உதவி எதுவும் கிடைக்காததால் செய்வதறியாது திகைத்து நின்ற அந்த ஏழைத் தாய், மருத்துவமனை பிணவறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கொடுத்த யோசனையின் பேரில், மகனின் உடலை ஜக்தல்பூர் மருத்துவக் கல்லூரிக்குத் தானமாகக் கொடுக்க முன்வந்தார். மகனின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுசெல்லவும், இறுதிச் சடங்குகள் செய்யவும் உரிய பணமில்லாத காரணத்தால், அவரது உடலை அந்த ஏழைத் தாய் தானம்செய்த நிகழ்வு நெகிழ்ச்சியடையச்செய்துள்ளது.