பீகாரில் தொடரும் அவலம்! - ப்ளஸ் டூ தேர்வில் முறைகேடு செய்த 1,000 பேர் சிக்கினர்

பீகாரில் நடந்த ப்ளஸ் டூ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,000 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்கள் மேற்கொண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு


பீகார் மாநிலத்தில் நடைபெறும் 10-ம் வகுப்பு, ப்ளஸ் டூ பொதுத்தேர்வுகள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவது வழக்கமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 'பிட்' வழங்குவதற்காக அவர்களின் உறவினர்களே தேர்வுக்கூடம் அமைந்திருந்த பள்ளிக்கட்டடத்தில் வௌவால்கள்போல் தொங்கிய புகைப்படம் நாடு முழுவதும் வைரலானது. அந்தப் புகைப்படம் பீகார் கல்வித்துறையால் நடத்தப்படும் பொதுத்தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க முடியாததன் போதாமைகளை வெளிச்சம்போட்டுக் காட்டியது. அடுத்ததாக, சென்ற ஆண்டில் ப்ளஸ் டூ தேர்வில் கலைப்பாடப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவருக்கு(!) 42 வயது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. வயதைக் குறைத்துக்காட்டி அந்த நபர் தேர்வில் பங்கேற்றிருந்தார். பின்னர், அவர் கைது செய்யப்பட்டார். அதற்கு முந்தைய ஆண்டில் கலைப்பாடப் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு, 'அரசியல் அறிவியல் பாடம் என்றால் என்ன' என்பது பற்றி அடிப்படை அறிவே இருக்கவில்லை. அது சமையல் கலை சம்பந்தமான பாடம் என்று சொல்லி திடுக்கிட வைத்தார். இதுபோன்ற நிகழ்வுகளால் அங்கு நடைபெறும் தேர்வுகளை ஊடகங்கள் கண்காணிப்பது வாடிக்கையாக இருக்கிறது

இந்த ஆண்டு பீகாரில் ப்ளஸ் டூ தேர்வுகள் பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கின. தேர்வுகள் நேற்று முடிவுக்கு வந்தன. இந்நிலையில், தேர்வில் முறைகேடு செய்து சிக்கிக்கொண்டவர்களின் விவரங்களைப் பீகார் கல்வித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அந்தவகையில், இந்த ஆண்டு காப்பி அடித்தல் போன்ற முறைகேடுகள் செய்த 1,000 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மேற்கொண்டு தேர்தல் எழுதத் தடை விதிக்கப்பட்டது. 25 போலி தேர்வறை கண்காணிப்பாளர்களும் பிடிபட்டுள்ளனர். மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய உறவினர்கள் சிலர்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!