வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (18/02/2018)

கடைசி தொடர்பு:10:00 (18/02/2018)

பள்ளிக் கழிப்பறையை வெறும் கையால் சுத்தம் செய்த பா.ஜ.க. எம்.பி!

மத்தியப்பிரதேச மாநிலத்தின் ரேவா மாவட்டத்தில் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த பள்ளிக் கழிப்பறை ஒன்றை பா.ஜ.க. எம்.பி. ஒருவர் வெறும் கையால் சுத்தம் செய்த நிகழ்வு நடந்துள்ளது. 

கழிப்பறையைச் சுத்தம் செய்யும் ஜனார்தன் மிஸ்ரா


பா.ஜ.கவைச் சேர்ந்த ஜனார்த்தன் மிஸ்ரா, மத்தியப்பிரதேசத்தின் ரேவா தொகுதி எம்.பியாகப் பதவி வகித்து வருகிறார். அந்தத் தொகுதியில் உள்ள கஜூவா கிராமத்தின் பள்ளியைக் கடந்த 15-ம் தேதி ஆய்வு செய்தார். அந்த பள்ளியில் இருந்த கழிப்பறை பராமரிப்பின்றிக் காணப்பட்டதால், மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதை அறிந்த மிஸ்ரா, அந்த கழிப்பறையைச் சுத்தம் செய்ய களமிறங்கினார். அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதை விடுத்து, அவரே நேரடியாகக் களமிறங்கி அந்த கழிப்பறையைச் சுத்தம் செய்தார். வெறும் கையால் கழிப்பறையை பா.ஜ.க. எம்.பி. ஜனார்த்தன் மிஸ்ரா சுத்தம் செய்வது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த கழிப்பறை பராமரிப்பின்றி மண் மூடிக் காணப்படுவதும், அதை எம்.பி. மிஸ்ரா, வெறும் கையால் சுத்தம் செய்வது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சியமைத்த பா.ஜ.க. தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டத்தை நாடு முழுவதும் முன்னெடுத்து வருகிறது. மகாத்மா காந்தியின் பிறந்தநாளான 2014 அக்டோபர் மாதம் 2-ம் தேதி இந்த திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் மோடியின் இந்த திட்டத்தின் தீவிர் ஆதரவாளராக ஜனார்தன் மிஸ்ரா இருந்து வருகிறார் என்று வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.