பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6,500 ரூபாய்தான் நிவாரணமா? என்ன ஆகிறது நிர்பயா நிதி!? | Supreme Court expresses anger over not utilizing nirbhaya fund; asks MP if it was 'doing charity?'

வெளியிடப்பட்ட நேரம்: 12:19 (18/02/2018)

கடைசி தொடர்பு:12:19 (18/02/2018)

பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6,500 ரூபாய்தான் நிவாரணமா? என்ன ஆகிறது நிர்பயா நிதி!?

2012-ம் ஆண்டில் தலைநகரில் நடந்த ஒரு சம்பவம் நாட்டையே உலுக்கியது. இன்றுவரை அதன் அதிர்வலை ஏதோ ஓர் இடத்தில் பேசுபொருளாக, எழுத்தாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதுதான், நிர்பயா. மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி, தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தபோது, உலக நாடுகள் இந்தியாவை அச்சத்துடன் பார்த்தது. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று எழுதவைத்தது. ஒரு வருடம் கழித்து, 'நிர்பயா நிதி' என்கிற திட்டத்துடன் நிதி ஒதுக்கப்பட்டு, அது பெண்களின் பாதுகாப்புக்குப் பயன்படும் என்றும், அதன் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. அந்தத் திட்டத்துக்கு வருடா வருடம் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதில் பாதிகூட இன்றுவரை திட்டத்துக்காக செயப்லடுத்தப்ப்டாத நிலையில், உச்ச நீதிமன்றத்தின் விவாதமாகி இருக்கிறது.

பாலியல் வன்முறை

வழக்கறிஞர் நிபுன் சக்சேனா என்பவர், நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களுக்குச் செய்யப்படும் டெஸ்ட் ஒன்றினை தடை செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதன்மீதான விசாரணையின்போது ஜனவரி 9-ம் தேதி, 'ஒவ்வொரு மாநிலமும் நிர்பயா நிதியின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கிய நிவாரணம் குறித்த ஆவணத்தை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், மத்தியப்பிரதேசம் மற்றும் சிக்கிம் தவிர, மற்ற 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குறிப்பிட்ட தேதிக்குள் ஆவணத்தைச் சமர்ப்பிக்கவில்லை.

இதனால் அதிர்ந்த உச்ச நீதிமன்றம், “பெண்கள் பாதுகாப்பில் உங்களுக்கெல்லாம் கவலையே இல்லையா?” என்று கடுமையாகக் கண்டித்துள்ளது. மேலும், நிர்பயா நிதியிலிருந்து அதிக நிதி ஒதுக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மத்தியப்பிரதேசத்தில், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 1951 பெண்களுக்கு, 6000 ரூபாய் முதல் 6500 ரூபாய் வரை வழங்கியிருப்பதைக் கண்டித்து, ”நீங்கள் என்ன தானமா வழங்குகிறீர்கள்? பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டதற்கு 6500 ரூபாய்தான் மதிப்பா?” என்று சீறியுள்ளது, நீதியரசர் மதன் லோகுர் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச்.

நிர்பயா நிதி முறையாகப் பயன்படுத்தப்படாதது குறித்துப் பேசிய வழக்கறிஞர் அஜிதா,

வழக்கறிஞர் அஜிதாஒன் ஸ்டாப் க்ரைசிஸ் சென்டர் என ஒன்று இருக்கிறது. அதாவது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எஃப் ஐ ஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவுசெய்வதில் தொடங்கி, அவருக்கு மருத்துவ உதவியை அளிப்பது, மனநல ஆலோசகர் தேவைப்பட்டால் செய்துகொடுப்பது, தங்கும் இடம் தேவைப்பட்டால் ஏற்பாடு செய்வது என எல்லாமே அங்கேயே பெறப்பட வேண்டும் என்பதுதான் 'ஒன் ஸ்டாப் க்ரைசிஸ்'.

'பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்' தொடங்கி, 'ஒன் ஸ்டாப் க்ரைசிஸ் சென்டர்' வரை இருக்கும் நிர்பயா நிதியின் கீழ் இருக்கும் 18 திட்டங்களும், மத்திய அரசு அவர்களாகத் துறையின் மூலம் செயல்படுத்துவதால்தான் இவ்வளவாவது சென்றடைந்துள்ளது. 'பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நிதி' என்கிற நிதியம் மூலம், ஒவ்வொரு மாநிலமும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.  மத்திய பிரதேசம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6500 ரூபாய் வழங்குவதாக உச்சநீதிமன்றத்தில்  ஆவணம் சமர்ப்பித்திருக்கிறது. ஆனால் தமிழக அரசு அந்த ஆவணத்தை சமர்ப்பிக்கக்கூட இல்லை. இதிலிருந்தே பெண் பாதுகப்பில் தமிழகம் கொடுக்கும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்.  தமிழகத்தில் இந்த 'ஒன் ஸ்டாப் க்ரைசிஸ் சென்டர்' இரண்டு இடங்களில்  இருப்பதாக அரசு இணையத்தளத்திலிருந்து தெரிகிறது. ஆனால், அதன் செயல்பாடு சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

ஒவ்வொரு அரசுக்கும் பெண்கள் மீதான வன்முறையை ஒழிப்பது பற்றி ஒரு தீவிரமான ஆலோசனை வேண்டும். ஆனால், பணம் கொடுக்கக்கூடிய மின்சாரத் துறை, உள்துறை, பொருளாதாரம் போன்றவையே பெரும்பாலும் முதல்வரின் கீழ் இருக்கும். சமூக நலத்துறை, பெண்கள் நலத்துறை போன்றவை பேருக்காக ஓர் அமைச்சருக்கு வழங்கப்படும். அந்த அமைச்சருக்குத் தேசியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொள்கைகள் குறித்தோ, வழங்கப்படும் திட்டங்கள் குறித்தோ எந்தப் பார்வையும் அறிவும் இருப்பதில்லை. அதனால், திட்டங்கள் சரியாகச் சென்று சேருவதில்லை.  பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் ஏற்பட்டால்தான், குறைந்தபட்ச நடவடிக்கையாவது எடுப்பார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவுமே காம்பன்சேஷன் கிடையாது. அவர்கள் அனுபவிக்கும் வேதனையை அளவிட முடியாது. பண ரீதியாக இந்த இழப்பினை ஈடுகட்ட முடியாவிட்டாலும், மன ரீதியாக உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு, பொருளாதார ரீதியான நிவாரணம் என்பது ஒரு ஆற்றுப்படுத்தும் செயலாகவே இருக்கும். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருளாதார ரீதியான பாதிப்பை போக்கவேண்டும். அவர்கள் மீதான சமூகப் பார்வை மாறவேண்டும். நீதி பெறுவதற்காக அவர்களுடைய அலைச்சல், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நலம் பெற, வேலை இழப்பு மற்றும் வருமான இழப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான சட்டத்தின் அடிப்படையிலும், 20 ஆண்டுகளுக்கு முன்பாக கல்பனா சுமதி வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் கொடுக்கப்பட்ட நிவாரணத்தின் அடிப்படையிலும் சில வழக்குகளில் குறைந்தபட்சம் மூன்று அல்லது ஐந்து லட்சம் வழங்கப்பட்டிருக்கின்றன. சில நேரங்களில் 10 லட்சம்கூட தரப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்த வரை, ரீட்டா மேரி, அண்ணாநகர் பத்மினி வழக்கு ஆகியவற்றில் ஐந்து லட்சம் நிவாரணமாகவும், அவர்களுக்கான இருப்பிடம் அரசுப்பணி போன்றவற்றையும் உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் கிரிமினல் நடைமுறைச் சட்டம் திருத்தப்பட்டு வந்ததன் பிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நிதி என்கிற விதி ஏற்படுத்தப்பட்டு, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. அதுதான் முறையானதாக இருக்கும். அதைவிட்டு 6500 ரூபாய், 8400 எனக் கொடுப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்கிறார்.


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை