வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (19/02/2018)

கடைசி தொடர்பு:10:22 (19/02/2018)

ஐ.ஏ.எஸ் கனவுடன் காத்திருப்பவர்களே... விண்ணப்பிக்கலாம் வாருங்கள்! #UPSC

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா! - வழிகாட்டியும் மாதிரித் தேர்வும்

`யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்' என்றழைக்கப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), ஐ.ஏ.எஸ் (I.A.S.), ஐ.எஃப்.எஸ் (I.F.S.) உட்பட 24 உயர் பணிகளுக்கான முதல்கட்ட தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

exam hall

`இந்த ஆண்டு, தோராயமாக 782 இடங்கள் நிரப்பப்படும்' என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கு 32 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல்கட்ட தேர்வு எழுத, மார்ச் மாதம் 6-ம் தேதி மாலை 6 மணிக்குள் ஆன்லைன் (www.upsc.gov.in) வழியே விண்ணப்பிக்க வேண்டும். 21 வயது நிரம்பியவர்கள் முதல் 32 வயது பூர்த்தியான பட்டப்படிப்பை முடித்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். 

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு ஐந்து ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்களுக்கு மூன்று ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து ஆண்டுகளும் வயதுவரம்பில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தற்போது இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் முதல்கட்டத் தேர்வை எழுதலாம். ஆனால், இறுதித் தேர்வின் முடிவு, முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் வெளியாகியிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிரிவைச் சார்ந்தவர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்தவர்களுக்குக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியே கட்டணத்தைச் செலுத்தலாம். அப்படிச் செலுத்த முடியாதவர்கள், விண்ணப்பிக்கும்போது `Pay by Cash' என்ற ஆப்ஷனைத் தேர்வுசெய்ய வேண்டும். வங்கியில் தேர்வுக் கட்டணம் செலுத்தும்வகையில் `சிலிப்'பை பிரின்ட் எடுத்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதை, விண்ணப்பித்த அடுத்த நாளே செய்யவேண்டியது அவசியம். தேர்வு மையங்கள், சென்னை, கோவை, திருச்சி, மதுரை மற்றும் வேலூரில் உள்ளன. 

ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே, முதன்மைத் தேர்வுக்கான தேர்வு மையம், விருப்பப் பாடம், முதன்மைத் தேர்வை எந்த மொழியில் தேர்வு எழுத விரும்புகிறீர்கள், விருப்பப் பாடமாக மொழிப்பாடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது எந்த மொழியில் தேர்வு எழுதுவீர்கள் என்பதையெல்லாம் முதல்கட்ட தேர்வுக்கான விண்ணப்பத்திலேயே குறிப்பிடவேண்டியது அவசியம். முதல்நிலை தேர்வில் விண்ணப்பிக்கும்போது, `பொதுப்பிரிவு' என விண்ணப்பித்துவிட்டு பிறகு பிரிவை மாற்ற முடியாது என்பதையும் விண்ணப்பதாரர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். ஐ.ஏ.எஸ்

ஏற்கெனவே அரசுப் பணியில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதை, தாங்கள் பணிபுரியும் துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும். பொதுப்பிரிவினருக்கு, குடிமைப் பணிக்கான தேர்வை ஆறுமுறையும், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தால் ஒன்பது முறையும், பொதுப்பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் ஒன்பது முறையும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும்போது வயது, கல்வித் தகுதி, சாதிச் சான்றிதழ் போன்ற எதையும் இணைக்கத் தேவையில்லை. தேர்வு எழுதுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர்  தேர்வு அனுமதி சீட்டைப் (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஹால் டிக்கெட்டை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட மாட்டாது.

முதல்நிலை தேர்வு, ஜூன் மாதம் 3-ம் தேதி நடைபெறும். இந்தத் தேர்வில் நான்கு விடைகளில் சரியான ஒரு விடையைத் தேர்வுசெய்யும் objective type வினாக்கள் கேட்கப்படும். தவறான விடையைத் தேர்ந்தெடுத்தால், நெகட்டிவ் மதிப்பெண் உண்டு. 

முதல்கட்ட தேர்வில் தேர்ச்சிபெறுபவர்கள், முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவேண்டியது அவசியம். முதன்மைத் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும். அதில் தேர்ச்சிபெற்றோர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். முதன்மை மதிப்பெண் பெறுபவர்கள், அவர்கள் விரும்பும் பணிவாய்ப்பைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். பணிகளும் பணியிடங்களும், தரவரிசை,  இட ஒதுக்கீடு மற்றும் வெற்றி பெற்றவர்களின் விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்படும். ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு, http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் தொடர்புகொள்ளலாம்.

இந்தத் தேர்வு குறித்து இளம் பகவத் ஐ.ஏ.எஸுடன் பேசினோம்...

``ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தமிழக அளவில் தேர்வாகும் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. தமிழக மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து, தீவிரமாக முயன்றால் அவர்களின் கனவு பலிப்பதோடு, தமிழ்நாட்டின் தேர்வு எண்ணிக்கையும் கூடும்'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்