வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (19/02/2018)

கடைசி தொடர்பு:13:01 (19/02/2018)

பாகிஸ்தான் விமான நிலையத்தை மோடி பயன்படுத்தியதற்கு 2.86 லட்ச ரூபாய் கட்டணம்..!

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பாகிஸ்தான் விமான நிலையங்களைப் பயன்படுத்தியதற்கு அந்நாட்டு அரசு 2.86 லட்ச ரூபாயை சேவைக் கட்டணமாக விதித்துள்ளது. 

பிரதமர் மோடியின் விமானப் பயணங்கள் குறித்து லோகேஷ் பத்ரா என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற்றுள்ளார். அந்தத் தகவலின்படி, பிரதமர் நரேந்திர மோடி, நேபாளம், பூடான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், கத்தார், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ரஷ்யா, ஈரான், பிஜி, சிங்கப்பூர் ஆகிய 11 நாடுகளுக்குச் செல்வதற்கு இந்திய விமானப் படை விமானங்களைப் பயன்படுத்தியுள்ளார்.

மேலும், ரஷ்யாவிலிருந்து இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, 2015-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி திடீரென்று அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் சென்றார். அதற்காக, மோடி சென்ற விமானம் லாகூர் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அப்போது, விமான நிலையத்தைப் பயன்படுத்தியதற்காக 1.49 லட்ச ரூபாய் கட்டணம் இந்திய விமானப் படைக்கு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 2016-ம் ஆண்டு மே மாதம் ஈரான் பயணத்தின் போது, லாகூர் விமான நிலையத்தைப் பயன்படுத்தியதற்கு 77,215 ரூபாயும், 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் கத்தார் பயணத்தின் போது லாகூர் விமான நிலையத்தைப் பயன்படுத்தியதற்கு 59,215 ரூபாய் கட்டணமும் விதிக்கப்பட்டது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.