வெளிநாடு தப்பிச் சென்ற மோசடி மன்னர்களை இந்தியா கொண்டுவர சிறப்பு பூஜை!

சிறப்பு பூஜை செய்தால் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச் சென்றவர்களைத் திரும்ப இந்தியா கொண்டுவர முடியும் என விசா கோயில் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார். 

சில்கூர் பாலாஜி கோயில்

சமீபத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து தலைமைறைவாக உள்ள நிரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இதேபோல் விஜய் மல்லையா மற்றும் லலித் மோடி உள்ளிட்டோர் வங்கியில் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச் சென்றுள்ளனர். இவர்களை இந்தியா கொண்டுவர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் இவர்களை இந்தியா கொண்டுவர முடியவில்லை. இதற்கிடையே இவர்களைத் திருப்பிக் கொண்டுவருவதற்கு ஹைதராபாத்தின் ஹிமாயத் நகரில் 'விசா கோயில்' என்று அழைக்கப்படும் சில்கூர் பாலாஜி கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. 

மிகவும் பிரபலமான இக்கோயிலில் வழிபட்டால் வெளிநாடு செல்வதில் உள்ள விசா பிரச்னை தீர்ந்துவிடும் என்று நம்பிக்கை பின்பற்றப்படுவதால் ஆயிரக்கணக்கானோர் தினமும் தங்களது விசா பிரச்னைகள் தீர வேண்டும் என வழிபாடு நடத்துகின்றனர். இன்று நடைபெறும் இந்தச் சிறப்பு பூஜை மூலம் கடன் வாங்கி வெளிநாடு தப்பிச் சென்றவர்களைத் திரும்ப இந்தியா கொண்டுவர முடியும் என இக்கோயிலின் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார். அதில், "சிறப்பு பூஜை மூலம் மோசடி செய்தவர்களை இந்தியா கொண்டு வர முடியும். அதேபோல், அவர்களிடமிருந்து மோசடி செய்யப்பட்ட கோடிக்கணக்கான இந்தியர்களின் பணத்தை மீட்க முடியும். 'ரணா விமோகன நரசிம்ஹா' என்பது ஒரு வலிமையான மந்திரம் ஆகும். இதைத் தொடர்ந்து வாசிக்கும்போது, தங்கள் கடன்களிலிருந்து நொடிப்பொழுதில் மக்கள் விடுவிக்கப்படுவார்கள்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!