ஒரு வார தொழில்முறைப் பயணமாக இந்தியா வந்தார் ஜூனியர் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மகன் ஜூனியர் டொனால்டு ட்ரம்ப் இந்தியா வந்துள்ளார். 

ஜூனியர் டொனால்டு ட்ரம்ப்

ட்ரம்ப் - இவனா (முதல் மனைவி) தம்பதியின் மகன், ஜூனியர் டொனால்டு ட்ரம்ப். தனது தந்தைக்காக அதிபர் தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டவர், தந்தையைப் போல தொழிலதிபராகவும் உள்ளார். ட்ரம்ப் நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்துவரும் இவர், தற்போது இந்தியா வந்துள்ளார். உலகம் முழுவதும் தொழில் நடத்திவரும் ட்ரம்ப் நிறுவனம், இந்தியாவிலும் தொழில் தொடங்க உள்ளது. அதன்படி, டெல்லி, மும்பை, புனே, குர்கான் மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளில் 'ட்ரம்ப் டவர்ஸ்' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்புகளை நிறுவ திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம், முதல்கட்டமாக குர்கானில் நவீன வசதிகளுடன்கூடிய 258 குடியிருப்புகள் கொண்ட அப்பார்ட்மென்டை கட்டிவருகிறது. 5 - 10 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளின் பணிகள், 2023-ம் ஆண்டு முடிவடையும். 

இது தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஜூனியர் டொனால்டு ட்ரம்ப் இந்தியா வந்துள்ளார். அவரது வருகையால், குர்கான் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அவர், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளையோ அல்லது பிரதமர் மோடியையோ சந்திக்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவரது தனிப்பட்ட வருகை என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த வார இறுதியில் டெல்லியில் நடைபெற உள்ள வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!