`ரூ.8 கோடியை எப்போ கொடுப்பீங்க?' - லதா ரஜினிக்கு கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

கோச்சடையான் படத்துக்கான கடனை எப்போது அடைப்பீர்கள் என நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

லதா ரஜினிகாந்த்

கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் கோச்சடையான். ஏ.ஆர்.ரகுமான் இசையில், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளியான படம் என்ற பெருமையைப் பெற்றது. இந்த நிலையில் கோச்சடையான் படத்தைத் தயாரிப்பதற்காக ஆட்பீரோ நிறுவனத்திடம் ரூ.10 கோடியை ரஜினிகாந்த் மனைவி லதா வாங்கியிருந்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், இதில் 1.5 கோடி ரூபாய் மட்டும் திருப்பி செலுத்தியதாகவும், மீதம் 8.5 கோடியைத் தரவில்லை என்றும் ஆட்பீரோ நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடந்த நிலையில், ரூ. 8.5 கோடி கடனை எப்போது திருப்பி அடைப்பீர்கள் என லதாவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் எதற்காகக் கடனைத் திருப்பி செலுத்தாமல் இருக்கிறீர்கள் என்றும் இதுகுறித்து பகல் 12.30 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது. இது ரஜினிகாந்த் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கிடையே ரூ.6.2 கோடி நிலுவை தொகையை 12 வாரங்களுக்குள் ஆட்பீரோ நிறுவனத்துக்கு லதா வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மீடியா ஒன் குளோபல் நிறுவனத்தின் சார்பில் இந்த தொகையை லதா ரஜினிகாந்த் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!