வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (20/02/2018)

கடைசி தொடர்பு:18:12 (20/02/2018)

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை மோடி வரவேற்காதது ஏன்?

கனடாவில் காலிஸ்தானுக்கு ஆதரவாக நடைபெற்றக் கூட்டத்தில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்ட காரணத்தினால் அவரை பிரதமர் மோடி வரவேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கனட நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முதன்முறையாக ஏழு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். கடந்த சனிக்கிழமையன்று இரவில் டெல்லி விமானநிலையத்தில் ஜஸ்டின் ட்ரூத் தரையிரங்கினார். அவரை, விவசாயத்துறை இணையமைச்சர் கஜேந்திரசிங் சேகாவத் வரவேற்றார். அதன்பின்னர், ஞாயிற்றுக்கிழமையன்று ஆக்ராவிலுள்ள தாஜ்மாஹாலையும், திங்களன்று அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்தையும், ட்ரூடோ அவரது குடும்பத்தினருடன் சுற்றிப் பார்த்தார்.

இந்த மூன்று நாள்களில் பிரதமர் மோடி, அவரைச் சென்றுப் பார்க்கவில்லை. மேலும், அந்தந்த மாநில முதல்வர்களும் ட்ரூடோவுக்கு உரிய வரவேற்பு அளிக்கவில்லை. பொதுவாக, ஒரு நாட்டின் தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போது, அவர்களைப் பிரதமர் மோடி, விமான நிலையத்துக்குச் சென்று ஆரத்தழுவி வரவேற்பது வழக்கம். இந்தமுறை, ட்ரூடோவைப் புறக்கணித்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து கனடா நாட்டிற்கான முன்னாள் இந்திய உயர் ஆணையர் விஷ்ணு பிரகாஷ் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், 'கனட  பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவின் மரியாதைக்குரிய விருந்தினர். இந்தியாவும், கனடாவும் ஜி20 நாடுகள் மற்றும் ஜி7 நாடுகளில் உறுப்பினர்களாக உள்ளன. இரு நாடுகளுக்குமிடையே உறவு நல்லமுறையில் உள்ளது. கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்றதில் விதிமுறைகள்(ப்ரோட்டோகால்) சரியான முறையில்தான் பின்பற்றப்பட்டுள்ளன. உலக அளவில், ஒரு நாட்டின் தலைவரை மத்திய இணையமைச்சர் வரவேற்பதுதான் முறை. இருப்பினும், சீக்கியர்கள் தொடர்பான விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன.

1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை ஓர் இனப்படுகொலை என்று கனடாவின் ஒன்டாரியோ மாகாண பாராளுமன்றத்தில், கடந்த ஆண்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், கனடாவில் நடைபெற்ற காலிஸ்தான் தொடர்பான கூட்டங்களில் ட்ரூத் கலந்துகொண்டு அவர்களை புகழ்ந்து பேசியுள்ளார். அதன்காரணமாக அவருக்கான வரவேற்பை மோடி தவிர்த்திருக்கலாம்' என்று தெரிவித்துள்ளார். ஜஸ்டீன் ட்ரூடோவை, பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங், புதன்கிழமையன்றும், பிரதமர் மோடி வெள்ளிக்கிழமையன்றும் சந்திக்கவுள்ளனர்.