டெல்லி தலைமைச் செயலாளர் மீது தாக்குதல்! - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது | AAP MLA Prakash Jarwal has been arrested

வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (21/02/2018)

கடைசி தொடர்பு:12:22 (21/02/2018)

டெல்லி தலைமைச் செயலாளர் மீது தாக்குதல்! - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது

டெல்லித் தலைமைச் செயலாளர் அன்சு பிரகாஷ் மீது தாக்குதல் நடத்திய, ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வால் கைது செய்யப்பட்டுள்ளார். 

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வீட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் அம்மாநிலத் தலைமைச் செயலாளர் அன்சு பிரகாஷ். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் அமனதுல்லா கான் மற்றும் பிரகாஷ் ஜார்வால், கெஜ்ரிவால் முன்னிலையில், தலைமைச் செயலாளரைத் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து, டெல்லி மாநில ஆளுநர் அனில் பைஜலிடம் நேரில் சென்று, தன்னைத் தாக்கிய எம்.எல்.ஏ-க்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் புகார் அளித்தார். 

அன்சு பிரகாஷ் கொடுத்த புகாரை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ- வும், பிரகாஷ் ஜார்வால் மீது டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸார், அவரைக் கைது செய்து, சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் சங்கத் தலைவர் மணீஷா சக்சேனா கூறுகையில், '' திங்கள்கிழமை நள்ளிரவில்,  நடந்த கூட்டத்துக்கு அன்சு பிரகாஷ் மட்டும் தனியாக அழைக்கப்பட்டுள்ளார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் 10,12 எம்.எல்.ஏ-க்கள் அங்கே இருந்துள்ளனர். டெல்லியில் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ரேஷன் அட்டை முறையாக வழங்கப்படாதது ஏன் என்று சில எம்.எல்.ஏ-க்கள் கேள்வி  எழுப்பி சிலர் அவரைத் தாக்கியுள்ளனர் '' என்றார்.

தலைமைச் செயலர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவது ஜோடிக்கப்பட்ட பொய் என்று ஆம் ஆத்மி கட்சி நேற்று மறுப்பு தெரிவித்திருந்தது. ''ஆதார் அட்டை இல்லாத 2.5 லட்சம் குடும்பத்தினருக்கு ரேஷன் அட்டை வழங்கப்படவில்லை. மக்கள் எம்.எல்.ஏக்களை கேள்வி கேட்கின்றனர். இது குறித்து தலைமைச் செயலரிடம் கேட்டபோது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  எம்.எல்.ஏ-க்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. லெப்டினென்ட் ஆளுநருக்கு மட்டுமே பதிலளிப்பேன்' என்று கூறியதோடு கோபமாகப் புறப்பட்டு சென்றார். தலைமைச் செயலரின் புகார் அளித்த பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி உள்ளது '' என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  

ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ பிரகாஷ் ஜார்வால், தாக்குதலுக்குள்ளானதாக சொல்லப்படும் தலைமைச் செயலர், சாதியை கூறி திட்டியதாக போலீஸில் புகார் அளித்துள்ளனர். தலைமைச் செயலரைத் தாக்கிய சம்பவத்தில் தொடர்புடையதாக சொல்லப்படும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆலோசகர் வி.கே.ஜெயின் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.


[X] Close

[X] Close