வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (21/02/2018)

கடைசி தொடர்பு:17:45 (21/02/2018)

இந்தியாவில் ஹாசினியைப் போலவே தினமும் 46 குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவு! #VikatanInfographics

பெண்

சிறுமி ஹாசினி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்த்-க்கு தூக்குத் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் நிலைகுலைய வைத்த இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட தஷ்வந்த், ஜாமீனில் வெளிவந்து பின்னர் தன் தாயையும் கொலை செய்து போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட தஷ்வந்த் போன்று ஒருவர் மட்டுமல்ல, அவரைப் போன்று இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா? ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது தேசியக் குற்றப்பிரிவு ஆணையம்.

இந்தியா முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டில் 39,068 பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அதில், மனதை பதைபதைக்கச் செய்யும் தகவல் என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்களில் 16,863 பேர் குழந்தைகள் (18 வயதுக்கு உட்பட்டவர்கள்). மொத்தம் பாதிக்கப்பட்ட பெண்களில் இது 43.2 சதவிகிதம் ஆகும்.

2016-ம் ஆண்டு தரவுகளின்படி, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில்தான், பதினெட்டு வயதுக்குக் குறைவான பதின்ம வயதுடைய பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, கர்நாடகம், டெல்லி ஆகிய 6 மாநிலங்களில் மட்டும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 10,104. 

பாலியல் வன்முறைக்கு ஆளான மைனர் பெண்களில் மொத்தம் 520 பேர் ஆறு வயதுக்கு உட்பட குழந்தைகள். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, டெல்லி ஆகிய 6 மாநிலங்களில் மட்டும் பாதிக்கப்பட்ட ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 338.

ஆறு முதல் பன்னிரண்டு வயது வரையிலான பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,596. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கேரளா, ஹரியானா, டெல்லி ஆகிய 6 மாநிலங்களில் இந்த எண்ணிக்கை 1,009 ஆக உள்ளது.

பாதிப்புக்குள்ளான 12 முதல் 18 வயது வரையிலான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 6091. இவர்களில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, சட்டீஸ்கர், டெல்லி ஆகிய ஆறு மாநிலங்களில் இந்த வயதுடையோர் பாதிப்பு எண்ணிக்கை 3812.

அதிக அளவில் பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை:

1) மத்தியப் பிரதேசம் -   2,479

2) மகாராஷ்டிரா         -   2,310

3) உத்தரப்பிரதேசம்  -  2,115

4) ஒடிசா                        -     1,258

5) கர்நாடகா                  -   1,142

"பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக அதிக நிதி ஒதுக்கப்படும்" என்று கூறிவரும் மத்திய அரசு, இந்தியா முழுவதிலும் ஒரு ஆண்டில் இத்தனை பெண் குழந்தைகளின் பாதிப்பை உணர்ந்துள்ளதா? பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்துள்ளதா என்றால், அவை வெறும் கேள்விகளாகவே உள்ளன. இவ்வளவு பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்ட பின்பும் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பது வேதனையளிக்கும் விஷயமாகவே உள்ளது.

ஹாசினியின் வாழ்க்கையை அழித்த தஷ்வந்த் போன்ற கயவர்கள், இனியும் உருவாகாமல் இருக்க, மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து, தீவிர நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இளம் பெண்களும், சிறுமிகளும் இந்தியாவில் சுதந்திரமாக வலம் வர முடியும்...


டிரெண்டிங் @ விகடன்