வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (21/02/2018)

கடைசி தொடர்பு:17:31 (21/02/2018)

`பஞ்சாப் வங்கியில் வாங்கிய ரூ.5,000 கடனை பென்ஷன் பணத்தில் அடைத்தோம்' - லால் பகதூர் சாஸ்திரி மகன் தகவல்!

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கியது தற்போது தெரியவந்துள்ளது.

லால் பகதூர் சாஸ்திரி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மில்லியன் கணக்கில் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவரிடமிருந்து எப்படி மோசடி தொகையை வசூலிப்பது என்பது தெரியாமல் பஞ்சாப் நேஷனல் வங்கி குழம்பி வருகிறது. ஏற்கெனவே மல்லையா போன்றவர்கள் இதே குற்றச்சாட்டில் சிக்கியிருக்கின்ற நிலையில் தற்போது நிரவ் மோடியும் மோசடியில் ஈடுபட்டுள்ளது இந்தியாவில் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இதே வங்கியில் லோன் வாங்கியது தற்போது தெரியவந்துள்ளது. ஆனால், அவர் வாங்கிய தொகை வெறும் 5,000 ரூபாய்தான். இதை எப்படி திருப்பிச் செலுத்தினார்கள் என்பதை அவரின் மகன் அணில் சாஸ்திரி தற்போது தெரிவித்துள்ளார். 

அதில், "சிறுவயதில் பள்ளிக்குச் செல்லும்போது ஒருமுறை அப்பாவின் அலுவலக வாகனத்தைப் பயன்படுத்த வேண்டியதாயிற்று. இருப்பினும் தொடர்ந்து அலுவலக வாகனத்தைப் பயன்படுத்த அப்பா மறுத்துவிடவே, நாங்கள் புதிதாகக் கார் வாங்க தீர்மானித்தோம். 12,000 மதிப்புள்ள பியாட் காரை வாங்க நினைத்தோம். ஆனால், எங்களிடம் 7,000 ரூபாய் மட்டுமே இருந்ததால் மீதமுள்ள தொகைக்குப் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி காரை வாங்கினோம். கார் வாங்கிய சில மாதங்களிலேயே தந்தை இறந்துவிட்டார். இதனால் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருந்தோம். எனினும், அம்மாவுக்கு வந்த பென்ஷன் தொகையை வைத்து வங்கிக்கடனை அடைத்துவிட்டோம்" என்றார். லால் பாகதூர் சாஸ்திரியின் இந்தக் கார் தற்போது அவரது நினைவிடத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பல மில்லியன் கணக்கில் கடனை வாங்கிக்கொண்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லுபவர்களுக்கு மத்தியில் லால் பாகதூர் சாஸ்திரி குடும்பத்தாரின் நேர்மை இணையதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க