வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (21/02/2018)

கடைசி தொடர்பு:22:00 (21/02/2018)

சிறப்புப் புலனாய்வு குழு தேவையில்லை; வங்கி மோசடி வழக்கில் மத்திய அரசு பதில்!

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியை விசாரிப்பதற்காக, சிறப்புப் புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை என்று, உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு முறையிட்டுள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி குறித்து, பொது நல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை,  நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர் மற்றும் சந்த்ருசத் தலைமையில் இன்று நடைபெற்றது. 

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் நிரவ் மோடி மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. அதனால், இந்த வழக்கை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என வினீத் தாண்டா வாதிட்டார். 

வங்கி மோசடி குறித்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. மேலும், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் நிரவ் மோடி மீதும், மோசடியில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணை நடைபெற்று வரும் நிலை, சிறப்புப் புலனாய்வு குழு அவசியமில்லாத ஒன்று என மத்திய அரசு சார்பில் வாதிட்ட கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இந்த வழக்கு மீதான விசாரணை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.