வெளியிடப்பட்ட நேரம்: 19:47 (21/02/2018)

கடைசி தொடர்பு:20:18 (22/02/2018)

11 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் கறிக்கோழிகள்... என்ன காரணம் ?

ன்னும் சில நாட்களிலோ சில மாதங்களிலோ அமெரிக்காவிலிருந்து கோழிக்கறிகள் இந்தியாவிற்கு இறக்குமதியாகப் போகின்றன. ஆம் இதற்காகத்தானே அமெரிக்கா கடந்த 11 வருடங்களாகப் போராட்டம் நடத்தி வருகிறது. அமெரிக்காவிலிருந்து கறிக்கோழிகள் இறக்குமதிக்கு தற்போது இந்தியா அளித்துள்ள அனுமதிக்குப் பின்னால் அமெரிக்காவின் 11 வருட நீண்ட போராட்டம் இருக்கிறது. எதற்காக இந்தப் போராட்டம்? அதற்கு முன்னர் அதன் வரலாற்றைத் தெரிந்து கொள்வோம். 

கடந்த 2007-ம் ஆண்டு. இந்தியாவில் பறவைக் காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நேரம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பறவைகளின்மீது அதிகமான கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பிக்கிறது இந்திய அரசாங்கம். அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் கோழிக் கறிகளுக்கும், சில விவசாயப் பொருட்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க ஆரம்பிக்கிறது. இறுதியில் அமெரிக்கக் கறிக்கோழிகள் இந்தியாவில் முழுமையாகத் தடை செய்யப்படுகிறது. இதனால் தனது பெரும் வணிகத்தை இழந்தது அமெரிக்கா. ஏனெனில் அமெரிக்காதான் கறிக்கோழி உற்பத்தியில் இன்றளவும் முதலிடம் வகிக்கும் நாடு. இந்த வரிசையில் இந்தியாவுக்கு ஐந்தாவது இடம். 

அமெரிக்க கறிக்கோழிகள்

இந்தியாவில் தனது வணிகத்தை முழுமையாக இழந்த அமெரிக்கா, உலக வர்த்தக அமைப்பிடம் முறையிட்டது. அமெரிக்காவின் சார்பில் "எங்கள் கோழி இறைச்சிக்கு இந்தியா தடை விதித்தது சர்வதேச விதிமுறைகளுக்கு முரணானது" என்று வாதம் வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட உலக வர்த்தக அமைப்பும், 'இந்தியா விதித்துள்ள தடை முரணானது' என்ற தீர்ப்பை 2014-ம் ஆண்டு வெளியிட்டது. இதனால் இந்தியாவில் வியாபாரம் செய்து கொள்ளலாம் என்று அந்த அமைப்பு அனுமதி வழங்கியது. அதனால் இந்தியாவை தனது விதிமுறைகளை மாற்றி அமைக்க அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இந்தியா இருமுறை விதிமுறைகளைத் தளர்த்தியும் அமைத்தது. இருமுறை விதிகளைத் தளர்த்தியும் அமெரிக்காவிற்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. அதன் பின்னர் இரண்டு நாடுகளும் கலந்துபேசி ஒருமுடிவுக்கு வந்துள்ளன. 

அமெரிக்க கறிக்கோழிகள் இறக்குமதி குறித்துச் சுகாதாரத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறையிடம் ஒப்புதல் கேட்கப்பட்டது. அதற்குத் தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனால் விரைவில் இந்தியாவில் அமெரிக்காவின் கறிக் கோழி இறைச்சி இறக்குமதியாகப் போகிறது என மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கறிக்கோழிகளும், அதன் பாகங்களும் பதப்படத்தப்பட்டு, பெட்டிகளில் அடைக்கப்பட்டுச் சந்தைக்கு விற்பனைக்கு வரும். இக்கறிக்கோழிகள் சில்லறைக் கடைகளுக்கும், ஹோட்டல்களுக்கும் நேரடியாகச் சப்ளை செய்யப்படும். அமெரிக்கக் கறிக்கோழியை வாங்கியதும் உடனடியாகச் சுத்தப்படுத்திப் பயன்படுத்த முடியும். இக்கறிக் கோழி விலை மிகவும் குறைவு. இதனால் உள்ளூர் சந்தையில் அமெரிக்கக் கறிக்கோழி எளிதில் விற்பனையாகும் வாய்ப்பு மிகவும் அதிகம். இதனால் அதிகம் பாதிப்படையப் போவது இந்தியாவில் உள்ள கறிக்கோழி நிறுவனங்கள்தான். உள் நாட்டு விற்பனை 40 சதவிகிதம் அளவுக்குப் பாதிக்கப்படும். இதில் இந்தியாவில் இறக்குமதியாகும் அமெரிக்கக் கோழிக் கறிகளில் பெரும்பாலானவை கோழிக் கால் பகுதிகளாகத்தான் இருக்கும். ஏனெனில் அமெரிக்காவில் உள்ள மக்கள் கோழிகளில் அதிகம் வெறுப்பது கால்பகுதிகளைத்தான். அவர்களுக்குக் கோழியின் உடல் சதைப்பகுதிகள்தான் அதிகமாகப் பிடிக்கும். அதனால் மீதமாகும் கோழிகளில் இருக்கும் கால் பகுதிகள்தான் இந்தியாவிற்கு வரும். 

அமெரிக்க கோழிகள்

நிலைமை எப்படியிருந்தாலும் அமெரிக்கா, கறிக்கோழியை விற்பனை செய்யும் என்பது உறுதியாகிவிட்டது. இனி வரும் காலத்தில் உள் நாட்டுச் சந்தையில் அமெரிக்கக் கறிக்கோழிகள் ஆதிக்கம் நிச்சயம் அதிகமாகும். அமெரிக்கக் கறிக்கோழிக்கு இந்திய கறிக்கோழி உற்பத்தியாளர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு இருந்துதான் வருகிறது. அமெரிக்கக் கோழிகளால் தங்கள் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்படும் என அவர்கள் தரப்பில் அரசிடம் தொடர்ச்சியாகக் கோரிக்கை வைக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் சார்பிலோ இறக்குமதியாகும் கோழிகளால் இந்திய கோழி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் எனச் சொல்லி வருகிறது. இதனால் உள்நாட்டுக் கோழி உற்பத்தியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். 

இந்தியாவில் உற்பத்தியாகும் கறிக்கோழிகளே உடலுக்குத் தீமையானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நிலையில் பல மைல்களுக்கு அப்பால் இருந்து இறக்குமதியாகும் கறிக்கோழிகளின் தரம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதும் தெரியவில்லை.


டிரெண்டிங் @ விகடன்