பஞ்சாப் முதல்வருக்கு அளித்த வாக்குறுதியை அதிரடியாக நிறைவேற்றிய கனடா பிரதமர் ஜஸ்டின்!

ஜஸ்டின் ட்ரூடோ

டெல்லியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க ஜஸ்பால் அத்வாலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.  

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, எட்டு நாள்கள் சுற்றுலாப் பயணமாகக் குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார். அவருக்கு இந்திய அரசு முறையான வரவேற்பு அளிக்கவில்லை என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். சீக்கியர்கள் தொடர்பான விவகாரத்தில் `இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் நிலவுகிறது. மத்திய அரசு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உரிய வரவேற்பு அளிக்காமல் புறகணித்தற்கு இதுவே காரணம்’ என்று கனடா நாட்டுக்கான இந்திய முன்னாள் உயர் ஆணையர் விஷ்ணு பிரகாஷ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார். 

இதனிடையே எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக இன்று இரவு டெல்லியில் கனடா தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துக்கு காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான ஜஸ்பால் அத்வாலுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி நாடு முழுவதும் பெரும், சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ஜஸ்பால் அத்வால் 1986-ம் ஆண்டு அப்போதைய பஞ்சாப் அமைச்சராக இருந்த ஒருவரைக் கொல்ல முயற்சி செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். அவருடன் ஜஸ்டின் மனைவி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டன. பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் நேற்று ஜஸ்டினை சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பின்போது அம்ரீந்தர் சிங், ஜஸ்பால் அத்வாலுக்கு விருந்து அழைப்புவிடுக்கப்பட்டது பற்றி ஜஸ்டினிடம் கேள்வியெழுப்பியதாகக் கூறப்படுகிறது. அதற்கு ஜஸ்டின் ‘எந்தப் பிரிவினைவாத இயக்கங்களுக்கும் கனடா ஆதரவளிக்காது' என்று உறுதியளித்தாராம். 

இந்நிலையில், கனடா உயர் ஆணையர் நாதிர் படேல், ஜஸ்பால் அத்வாலுக்கு விடுத்த விருந்து அழைப்பை ரத்து செய்துள்ளார். இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். ‘கனடா பிரதமரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரங்களை ஊடகங்களுக்குச் சொல்ல முடியாது’ என்று பதில் அளித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!