இந்தியாவின் முதல் பெண் சோலோ ஃபைட்டர் பைலட் பற்றிய ஐந்து வாவ் தகவல்கள்! #AvaniChaturvedi | Avani Chaturvedi becomes India's first ever solo female fighter Pilot

வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (23/02/2018)

கடைசி தொடர்பு:16:42 (23/02/2018)

இந்தியாவின் முதல் பெண் சோலோ ஃபைட்டர் பைலட் பற்றிய ஐந்து வாவ் தகவல்கள்! #AvaniChaturvedi

இந்தியாவின் முதல் பெண் ஃபைட்டர் பைலட்டாகி இருக்கும் அவனி சதுர்வேதிக்கு, சச்சின் டெண்டுல்கர் உள்பட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்துவருகிறார்கள். யார் இந்த அவனி சதுர்வேதி?

அவனி சதுர்வேதி

சிறு வயதிலிருந்தே ‘பறக்கும்’ கனவுகொண்ட அவனி சதுர்வேதி, மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பத்தில் இருவர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பைலட் கனவு இயல்பாக இருந்தது. ‘நான் கல்பனா சாவ்லா மாதிரி பறக்க வேண்டும்' என்று குழந்தைபோல சொல்லிக்கொண்டிருந்தார். 

”குழந்தையாக இருக்கும்போது நாம் அனைவருமே வானத்தை நோக்கி ஒரு பறவையைப்போல பறக்க விரும்புவோம்” என்று அந்த நாள்களை நினைவுகூர்கிறார் அவனி. 

ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு பிரபல கல்லூரியில் பி.டெக் படித்தவர். இந்திய விமானப் படை தேர்வையும் எழுதினார். ஐபிஎம் பணியில் இருந்தவர், இந்திய விமானப் படை வாய்ப்பு கிடைத்ததும், சந்தோஷமாகப் பறந்துவிட்டார். 

அவனி சதுர்வேதி

”மற்ற பெண் குழந்தைகள்போல அல்லாமல், சிறு வயதில் விமான மாதிரிகளை வைத்துத்தான் விளையாடுவாள். கல்பனா சாவ்லா இறந்தபோது, அவனிக்கு வயது 11. கல்பனா சாவ்லாபோல உங்கள் எல்லோரையும் பெருமைப்படுத்துவேன் என்றாள்” என்கிறார் அவரின் தாய், சவிதா சதுர்வேதி. அவனியின் விமானப் படை தேர்வு உறுதிப்படுத்தப்படும் வரை, அந்தத் தேர்வை எழுதியதே தாய்க்குத் தெரியாதாம். 

“முதலில், சாதாரண விமானத்தில் பறக்கும் ஸ்ட்ரீமில் தேர்ந்தெடுக்கப்பட்டேன் அதன்பின், ஃபைட்டர் ஃப்ளையிங் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு வெவ்வேறு ஏர்கிராஃப்டினை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்து. அதில் ஒன்று, தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறியது” என்கிற அவனி, இப்போது இயக்கியது, Mig-21 Bison என்கிற ரஷ்ய வகை விமானம். இதற்காக, இவர் எடுத்த பயிற்சிகள் மிகப்பெரியது. 

Pilatus என்கிற விமானத்தில் அடிப்படை பயிற்சி பெற்று, ஆறு மாதம் ஹைதராபாத்தில் இருக்கும் ஹக்கிம்பேட்டில் இருக்கும் விமானப் படை தளத்தில், கிரண் ஃபைட்டர் ஜெட் வகை விமானத்தை ஓட்டி பயிற்சி எடுத்தார். ஒரு வருட தீவிரப் பயிற்சி. கடந்த வாரம்வரை, பயிற்றுநரின் உதவியுடன் இயக்கி வந்தவர், திங்கள்கிழமை (19.02.18) தனியாக விமானத்தை இயக்கியிருக்கிறார். 

இதுகுறித்து தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் #TouchTheSkyWithGlory என்கிற ஹேஷ்டேக்குடன், ”ஆஃபீசர் அவனி சதுர்வேதி இந்தியாவின் முதல் ஃபைட்டர் ஏர்க்ராஃப்டை முதன்முதலாக தனியாக இயக்கியவர் இவரே. 19-ம் தேதி அவர் விமானத்தை இயக்கினார்”  என்று அவனி விமானத்தில் ஏறுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை இணைத்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது, இந்திய விமானப் படை.

”இது ஃபைட்டர் பைலட் ட்ரைனிங்கின் மைல்கல். முதல் முறை ஒரு பெண் அதனை தனியாக இயக்கி இருக்கிறார். இது இந்திய விமானப்படை பெண்கள் முன்னேற்றத்தில் கொண்டிருக்கும் அக்கரையைக் காட்டுகிறது. இதைத்தான் தடைகளைத் தகர்ப்பதென்பார்கள். இந்திய ஆயுதப் படைக்கு இது மிகப்பெரிய நாள்” என்கிறார் இந்திய விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் அனுபம் பானர்ஜி.

அவனியைத் தொடர்ந்து பாவனா காந்த், மோஹனா சிங் ஆகியோரும் ஃபைட்டர் பைலட் நிலைக்குப் பயிற்சி பெற்றுவருகிறார்கள். பாகிஸ்தானில் 20 பெண் ஃபைட்டர் பைலட்டுகள் இருக்கிறார்கள் 2006-ம் ஆண்டிலிருந்து அதிக அளவிலான பெண்களை இணைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுவருகிறது. 2016 ஆண்டுக்கு முன்பு வரை 2.5% என்றே ராணுவத்தில் பெண்கள் இருந்தார்கள். அதிலும் பெரும்பாலானவை, களத்துக்குச் செல்லும் பணி அல்ல. அந்த நிலையில் மாற்றத்தின் விதையைத் தூவியிருக்கிறார் அவனி. அடுத்த பேட்ச் பயிற்சிக்கான பெண்கள் அதிகம் தேர்வாகி இருக்கிறார்களாம்.

 


டிரெண்டிங் @ விகடன்