ஐ.டி. ஊழியர்களுக்கு மீண்டும் அடி! - ஹெச் 1 பி விசா விதிமுறையில் கடும் கட்டுப்பாடு

அமெரிக்க அரசு ஹெச்.1 பி விசா விதிமுறைகளை மேலும் கடுமையாக்கியுள்ளது. இதனால், இந்திய ஐ.டி நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. 

Trump

அமெரிக்காவில் இயங்கிவரும் அனைத்துத் தொழில்துறைகளிலும் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகத் தனது நிலைப்பாட்டைக் கொண்ட டொனால்ட் ட்ரம்ப் அரசு, அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் வகையில், வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஹெச்.1 பி விசா நடைமுறையில் புதிய விதிமுறை கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது ட்ரம்ப் அரசு. 

புதிய விதிமுறைப்படி, வெளிநாடுகளில் இருந்து வேலைக்குப் பணியமர்த்தப்படும் ஊழியர்களின் கல்வித் தகுதி, அவருக்கு வழங்கப்படும் பணி, செய்யும் வேலையில் அவரது திறன் ஆகியவற்றை விரிவாகக் குறிப்பிட வேண்டும். அதற்கான அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும். 

அதுபோலவே மூன்றாவது நபரின் பணியிடங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஹெச்1 பி விசா மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படாது. அதற்குப் பதிலாக, அவர் பணியாற்றும் காலத்துக்கு மட்டும் விசா வழங்கப்படும். அதன் பின், ஒவ்வொரு முறையும் விண்ணப்பித்து மீண்டும் அவர்கள் விசா பெற வேண்டும். 

அமெரிக்க ஹெச்.1 பி விசா விண்ணப்பத்தில் இந்தியர்கள்தான் முன்னிலை வகிப்பர். இந்த ஆண்டுக்கான விசா விண்ணப்பம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்தப் புதிய விசா விதிமுறையால், இந்திய ஐ.டி நிறுவனங்கள் மற்றும் ஐ.டி ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!