வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (24/02/2018)

கடைசி தொடர்பு:12:53 (24/02/2018)

`சீனாவைவிட இந்தியா சிறந்தது' - சொல்கிறார் ஜூனியர் ட்ரம்ப்!

சீனாவைவிட இந்தியாவில் தொழில்புரிவது எளிதானது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகன் ஜூனியர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜூனியர் டொனால்டு ட்ரம்ப்

ஒருவார கால தொழில்முறைப் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகன் ஜூனியர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா வந்துள்ளார். குடும்ப நிறுவனமான ட்ரம்ப் நிறுவனத்தின்கீழ், செயல்பட்டு வரும் `ட்ரம்ப் டவர்ஸ்' என்னும் கட்டுமான நிறுவனம் இந்தியாவிலும் தனது தொழிலைத் தொடங்க உள்ளது. அதன்படி, இந்தியாவின் முக்கிய நான்கு நகரங்களில் ட்ரம்ப் டவர்ஸ் தனது ஆடம்பர குடியிருப்புகளைக் கட்டிவருகிறது. 2023-ம் ஆண்டு முடிவுக்குவரும் இத்திட்டம், மிகப் பெரிய பொருள்செலவில் ஆடம்பரமாகத் தயாராகி வருகிறது. இக்குடியிருப்புகளை வாங்க உள்ளவர்களுடன் நடக்கும் விருந்தில் பங்கேற்பதாற்கவும் தங்களது தொழிலை மேலும், விரிவுபடுத்துவது தொடர்பாகவும் ஜூனியர் ட்ரம்ப் இந்தியா வந்துள்ளார். 

இந்தநிலையில் நேற்று நடந்த உலக வர்த்தக உச்சி மாநாட்டில் பங்கேற்று ஜூனியர் ட்ரம்ப் பேசினார். அதில், "இந்தியர்களிடையே தொழில்முனைவோர் திறன் உள்ளது. மொழி, நம்பகமான உறவுகளை வளர்ப்பதற்கான திறன் உள்ளிட்டவை இருப்பதால் இந்தியர்களுடன் தொழில்புரிவது எளிதாகிறது. இது அமெரிக்காவில் உள்ளதுபோல் இருக்கிறது. சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் நிலவும் சூழல் தொழில் தொடங்க ஏதுவாக உள்ளது. சீர்திருத்தங்களை நோக்கி பிரதமர் மோடி அரசைக் கொண்டுசெல்கிறார். இங்கே நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. என்னைப் பொறுத்தவரை, நிச்சயமாக, இந்தியாவில் தொழில்புரிவது மிகவும் சுலபம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க