வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (24/02/2018)

கடைசி தொடர்பு:19:00 (24/02/2018)

`வேறு வேலையைத் தேடிக்கொள்ளுங்கள்’ - மெஹுல் சோக்ஸி ஊழியர்களுக்குக் கடிதம்

`என்னால் சம்பளம் கொடுக்க முடியவில்லை, வேறு வேலையைத் தேடிக்கொள்ளுங்கள்’ என்று பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழலில் சிக்கியுள்ள மெஹுல் சோக்ஸி, தனது நிறுவன ஊழியர்களுக்கு மின் அஞ்சல் கடிதம் அனுப்பியுள்ளார். 

கடிதம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர்கள் நிரவ்மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி. இவர்கள்மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், மெஹுல் சோக்ஸி தனது கீதாஞ்சலி ஜெம்ஸ், நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில், `தனக்கும் தன் நிறுவனத்துக்கும் எதிராக அச்சமும் அநீதியுமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையில் ஊழியர்களின் நிலுவை ஊதியங்களையும் எதிர்கால ஊதியங்களையும் தன்னால் கொடுக்க இயலாது. என்னுடன் இருந்ததற்காகவே ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை’ என்று தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் தவறான புகாரால் எனது தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கடந்த வாரம் நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கிக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். அவரைத் தொடர்ந்து, தனது நிறுவன ஊழியர்களுக்கு, இந்த மின் அஞ்சல் கடிதத்தை, மெஹுல் சோக்ஸி தனது வழக்கறிஞர் சஞ்சய் அபாட் மூலம் வெளியிட்டுள்ளார்.