``இன ரீதியாக, பாலியல் ரீதியாக இழிவுபடுத்தும் படைப்புகளில் நான் இருக்கமாட்டேன்!’’ - சோனம் கபூர் | Sonam Kapoor speaks about social responsibility

வெளியிடப்பட்ட நேரம்: 15:54 (24/02/2018)

கடைசி தொடர்பு:15:54 (24/02/2018)

``இன ரீதியாக, பாலியல் ரீதியாக இழிவுபடுத்தும் படைப்புகளில் நான் இருக்கமாட்டேன்!’’ - சோனம் கபூர்

#PadManChallenge #SpeakUp #Metoo - ஹேஷ்டேக் சேலஞ்ச்களால் கிடைக்கும் விழிப்புஉணர்வையும், தாக்கத்தையும் 2017-ம் வருடம் கண்டுகொண்டது. `பேட்மேன்’ திரைப்படத்தின் வெற்றியும், அது வலியுறுத்திய மாதவிடாய் சுகாதாரத்தின் முக்கியத்துவமும் தனக்கு புது எனர்ஜியைக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார் சோனம் கபூர்.

பொதுவாக எந்தப் படம் வெளிவந்தாலும், `படத்தைப் படமாக மட்டும் பாருங்கள் ப்ரோ’ என்பவர்களிடமும், சமூக மாற்றம், சிந்தனை ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் கலைப் படைப்புகள் விமர்சனத்துக்கு உட்பட்டது’ என்பவர்களிடமும், பேசுவதற்கு சோனம் கபூரிடம் சில விஷயங்கள் இருக்கின்றன.

                                                                                                                                                             சோனம் கபூர்

`ஹஃப்பிங்டன் போஸ்ட்’ தளத்தில் வெளிவந்திருக்கும் சோனம் கபூரின் உரையாடலில், ’கதாபாத்திரத்தின் நீளம், நேரம் முக்கியமில்லை. ஒரு நல்ல நடிகரால், தான் சொல்ல வந்ததை நிச்சயம் சரியாகச் சொல்லமுடியும். ஒரு நடிகரின் உழைப்பு, திரைப்படத்திற்கு மதிப்பையும், வாழும் இந்தச் சமூகத்துக்கு சரியான தாக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். எந்தப் படைப்பையும் தடை செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், இன வெறியைத் தூண்டும், பாலியல் ரீதியாக இழிவுசெய்யும், மனிதத்தை வெறுக்கும் எந்தப் படைப்பிலும், என்னால் இருக்க முடியாது” என்று கூறியிருக்கிறார். 

ஒரு நடிகரின் தனிப்பட்ட வளர்ச்சி பற்றிய அவரின் பார்வை குறித்த கேள்விக்கு, ``திரைத்துறைக்கு வந்து ஒரு வருடம் கழித்து கொஞ்சம் நிதானித்து என்னைக் கேட்டுக்கொண்டேன். மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக மாறுவதா, நல்ல நடிகராக நிலைப்பதா? நட்சத்திர அந்தஸ்தை அடைய வேண்டிய வழியில் நான் என் பாதையை தொலைக்கும்படியான சூழ்நிலை வரலாம் என்பதால், சிறந்த நடிகராக வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் என்னோடு வைத்துக்கொண்டேன். மிகவும் வசதியாக, மகிழ்ச்சியாக உணரும் கதாபாத்திரங்களில் என்னைப் பொருத்திக்கொள்கிறேன். நான் நடித்த படங்களில், கற்றுக்கொள்வதற்கு எனக்கு ஏராளம் இருந்தது. எந்த படத்தில் நடித்ததற்காகவும் நான் வருந்தவில்லை. ஒரு படம், நேற்று இருந்த என்னை இன்று மேம்பட்டவளாக உணரச் செய்யவேண்டும். என்னை வளர்க்கும் உணர்வைத் தரும் படங்களில் மட்டுமே நடிப்பதென முடிவெடுத்தேன். இந்தப் பயணம் அழகானது’ என்கிறார் சோனம்.            

                                                                                   சோனம்

பெண் விடுதலை, பெண்ணியம்  என படைப்புகளிலும் விவாதங்கள் விரியும் காலமிது. எனினும், சில அடிப்படை கருத்தாக்கங்கள் முன்னோக்கி காலத்தை நகர்த்துகிறதா, இன்னும் கூட இருண்ட காலத்துக்குக் கூட்டிச் செல்கிறதா? - நேர்காணல் செய்தவர் கேட்ட கேள்விக்கு பளிச்சென பதில் தருகிறார், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியால் அறிமுகப்படுத்தப்பட்ட சோனம். இன்றைய நாளில், ``நீங்கள் அங்கம் வகிக்கும் ஒரு செயலில் உங்களுக்கு பொறுப்பில்லை என்று நீங்கள் ஒதுங்கினால், உங்களைக் குறித்து நீங்கள் வெட்கப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக, ஆற்றல்மிக்க பதவிகளில், நிலைகளில் இருக்கும்பொழுது, இன்னும் பொறுப்புடன் இருப்பது அவசியம். ஒருவேளை நாம் உடோபியன் சமூகத்தில் வாழ்ந்திருந்தால், கலையின் பொருட்டு என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என விட்டுவிடலாம். அப்படியில்லையே. பலரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் நீங்கள் இருந்தால், முழுப்பொறுப்பையும் நீங்கள்தான் சுமக்கவேண்டும்”

`பத்மாவத்’ திரைப்படத்தின் மீதான சர்ச்சை, `பத்மாவத்’தின் கதாபாத்திரங்கள் ஏற்படுத்திய நேர்மறை, எதிர்மறை தாக்கங்கள் குறித்த கேள்விக்கு, ``நான் ‘பத்மாவத்’ பார்க்கவில்லை. அதனால், சில விஷயங்களைக் குறிப்பிட்டு பதிலளிக்க முடியவில்லை. ஆனால், ஸ்வரா பாஸ்கரின் `பத்மாவத்’ பற்றிய கருத்தையும், அவரின் கருத்துரிமையையும் நான் ஆதரிக்கிறேன். ஸ்வரா பாஸ்கர் துணிச்சலானவர். இந்தத் துறையில் சில விஷயங்களைப் பேசுவதற்கு தனி துணிச்சல் வேண்டும். என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் சஞ்சய் பன்சாலி, தீபிகா, ஷாஹித் என படக்குழுவுக்கு ஒரு கண்ணோட்டம் இருந்ததைப் போலவே, ஸ்வராவுக்கும் இருக்கிறது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்