வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (26/02/2018)

கடைசி தொடர்பு:08:39 (26/02/2018)

ஒடிசாவில் மாயமான காஷ்மீர் மருத்துவ மாணவர்! -போலீஸார் தீவிர விசாரணை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயின்றுவந்த ஜம்மு-காஷ்மீர் மாநில மருத்துவ மாணவர், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் மாயமானார். இதுகுறித்து, போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். 

Photo: ANI

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த சுஹைல் அய்ஜாஸ் கட்டாரியா என்ற மாணவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் படித்துவருகிறார். ஊருக்குச் சென்று திரும்புவதாகக் கூறிச்சென்ற அவரைக் கடந்த 9-ம் தேதி முதல் காணவில்லை என்று அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். சம்பவம்குறித்து பேசிய சுஹைலின் தந்தை அய்ஜாஸ் அகமது கட்டாரியா, ``செலவுக்குப் பணமில்லை என்று கூறி கடந்த 6-ம் தேதி, சுஹைலிடமிருந்து செல்போன் அழைப்பு வந்தது. அவர் கேட்ட பணத்தை அடுத்த நாள் (பிப்ரவரி 7) நான் வங்கிக் கணக்கில் செலுத்தினேன். 9-ம் தேதிக்குப் பின்னர், அவர் செல்போனில் தொடர்பு கொள்ளவே இல்லை. கடந்த 20-ம் தேதி வரை பொறுமையாக இருந்த பின்னர், எங்களுக்குச் சந்தேகம் எழுந்தது. எனவே, அவரை நாங்கள் புவனேஷ்வர் சென்று  தேடத் தொடங்கினோம்’, என்றார். 

தனது உறவினர் ஒருவரின் திருமணம் ஒடிசாவின்  புவனேஷ்வரில் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறுவதாவும், அதை முடித்துவிட்டு பிப்ரவரி 16 அல்லது 17-ம் தேதி திரும்புவதாகவும் சுஹைல் கூறிச்சென்றதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். மேலும், அவரிடம் 3-க்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்ததாகவும், அவை எல்லாம் அணைத்துவைக்கப்பட்டிருப்பதால், உடனடியாக அவரது பெற்றோரைத் தொடர்புகொண்டு விவரத்தைக் கூறியதாகவும் சுஹைலின் நண்பர்கள் தெரிவித்தனர். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அவரது செல்போன் கொல்கத்தாவில் கடைசியாக இயங்கியதாகக் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, ஒடிசா போலீஸார் கொல்கத்தா சென்று விசாரணை நடத்த உள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஒரே மாணவர் சுஹைல் என்பது குறிப்பிடத்தக்கது.