வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (26/02/2018)

கடைசி தொடர்பு:13:20 (26/02/2018)

வங்கி மோசடி வழக்கில் சிக்கிய பஞ்சாப் முதல்வரின் மருமகன்!

நாட்டின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி ஆலைகளுள் ஒன்றான சிம்பொலி சுகர்ஸ் லிமிடெட் நிறுவனம் ஓரியண்டல் வங்கியில் கடன்பெற்று மோசடி செய்ததாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்கின் மருமகன் குர்பால் சிங்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 

Photo: ANI

இதுதொடர்பாக வங்கி சார்பில் சி.பி.ஐ-யிடம் கடந்தாண்டு நவம்பர் 17-ம் தேதியே புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. கடந்த 22-ம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளது, தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  ஓரியன்டல் பேங் ஆஃப் காமர்ஸ் வங்கியில் சிம்பொலி சுகர்ஸ் லிமிடெட் நிறுவனம், கடந்த 2015-ம் ஆண்டில், ரூ. 97.85 கோடியைக் கடனாகப் பெற்றுள்ளது. அந்தக் கடனைத் திரும்பச் செலுத்துவதற்காகச் சிம்பொலி நிறுவனம் ரூ.110 கோடியைக் கடனாகப் பெற்றதாக வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கின் மருமகன் குர்பால் சிங் உள்பட 13 பேர்மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகிறது. 

இந்த நிலையில், பஞ்சாப் முதலமைச்சரின் குடும்பமே ஊழலில் திளைப்பதாக மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ``வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடுகள் செய்திருக்கும் முதலமைச்சரிடமிருந்து நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை’' என்றார்.