''ஶ்ரீதேவியை மூணு வாரத்துக்கு முன்னாடி பார்த்தப்ப கூட ரொம்ப சோர்வா இருந்தா...!'' கலங்கும் குட்டி பத்மினி

'குழந்தை முகம்; தேவதை உடல்வாகு' - நடிகை ஶ்ரீதேவியைப் பற்றி இயக்குநர் ஒருவர் சொன்ன வரி இது. மரணத்தின் முந்தைய இரவும் பச்சை நிறப் பட்டு ஆடையில் அழகின் உச்சமாகத்தான் ஜொலித்தார் அவர்.  ஶ்ரீதேவி இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு, ஏதோ ஓர் உள்ளுணர்வின் உந்துதலால், 'ஏதோ தப்பாப் படுது' என்ற ட்விட் செய்திருக்கிறார் நடிகர் அமிதாப் பச்சன். கார்டியாக் அரெஸ்ட்டில் இறந்ததாகச் சொல்லப்படும் ஶ்ரீதேவிக்கு, இதுவரை இதய நோய்க்கான எந்தவித அறிகுறியும் இருந்ததில்லை என்கிறார் ஶ்ரீதேவியின் மைத்துனர். ஶ்ரீதேவி மறைவுக்கு அமெரிக்கத் தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அவருடைய குழந்தைப் பருவத்துத் தோழியான குட்டி பத்மினி, ஶ்ரீதேவி குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். 

குட்டி பத்மினி

 ''ஶ்ரீதேவி என்னைவிடக் கொஞ்சம் குட்டிப் பொண்ணு. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, அவள் ரொம்பவே அம்மாப் பொண்ணு. ஷூட்டிங் இடத்தில் கொஞ்சம் கூட்டமாக இருந்தாலே பதற்றமாகிவிடுவாள். ஆனால், காலம் அவளை எப்போதும் ஷூட்டிங், ரசிகர்கள், பரபரப்பு, கூட்டம் என்றே வைத்துவிட்டது. ஶ்ரீதேவியின் அம்மா வேறுவேலையாகப் போகும்போதெல்லாம் என் அம்மாவிடம்தான் ஶ்ரீயை விட்டுட்டுப் போவார். அப்போதெல்லாம் அம்மா பக்கத்தில் இல்லையென தூங்கவே மாட்டாள். தூங்கும்போதும் அம்மா பக்கத்தில் இருக்க வேண்டும் அவளுக்கு. மொத்தத்தில், ஶ்ரீ ரொம்ப பயந்த குழந்தை. கொஞ்சம் வளர்ந்த பிறகும் அம்மா துணையின்றி வெளியே போகமாட்டாள். அதனால்தான், அம்மா இறந்தபோது, 'இனி, தனக்கு வாழ்க்கையே இல்லை' என்று கொஞ்ச காலம் மனம் உடைந்து போயிருந்தாள்'' என்ற குட்டி பத்மினி குரலில் தன் குழந்தைப் பருவத்துத் தோழியை இழந்த வேதனையின் சுவடு, வார்த்தைக்கு வார்த்தை தெரிந்தது. 

அழகு

''ஶ்ரீதேவி இறந்த செய்தியை டி.வி.யில் பார்த்தபோது நம்பவே முடியவில்லை. மூன்று வாரங்களுக்கு முன்புதான் மும்பையில் ஒரு திருமணத்தில் சந்தித்தோம். சர்ப்ரைஸ் தாங்கமுடியாமல் 'ஹாய்' என்றேன். பதிலுக்கு 'ஹாய்' சொன்ன ஶ்ரீதேவி, வேறு எந்த வார்த்தையும் பேசவில்லை. அந்த நேரத்தில் மனதுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. இப்போது யோசிக்கும்போது, வேறு தோன்றுகிறது. அன்றைக்குப் பார்த்தபோதே ஶ்ரீதேவி வெளுத்துப்போய் சோர்வாகத் தெரிந்தார். ஹெல்த் பிரச்னை இருந்திருக்கலாம். அதனால்தான் பேசமுடியாமல் சென்றுவிட்டாரோ என்னவோ. எனக்குத் தெரிந்த ஶ்ரீதேவி ரொம்ப மரியாதையான பெண். மிகுந்த பொறுமைசாலி'' என்றார். 

அழகு

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!