ஸ்ரீதேவி மரணத்தில் துபாய் போலீஸ் வெளியிட்ட புதிய தகவல்!

ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக `gulf news’ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ரத்தப்பரிசோதனை அறிக்கையில் ஸ்ரீதேவியின் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பது (Traces of alcohol) உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.  

ஸ்ரீதேவி
 

கடந்த 20-ம் தேதி துபாயில் நடந்த திருமணம் ஒன்றில் பங்கேற்க ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி, போனி கபூர், ஸ்ரீதேவி ஆகியோர் சென்றுள்ளனர்.  திருமணம் முடிந்த பின், போனி கபூரும்  மகள் குஷியும் மும்பை திரும்பினர். ஸ்ரீதேவி மட்டும் ஷாப்பிங் செய்ய வேண்டிய வேலை இருப்பதால் துபாயில் உள்ள எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். 

மும்பை திரும்பிய போனி கபூர், மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டுமென்பதற்காக, அவரிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் 24-ம் தேதி மீண்டும் துபாய் சென்றுள்ளார். மாலை 5.30 மணியளவில், திடீரென்று மனைவியின் முன்னர் போய் போனி கபூர் நின்றதும் ஸ்ரீதேவி ஆச்சர்யமும் சந்தோஷமும் அடைந்துள்ளார். பின்னர், இருவரும் 15 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துள்ளனர். மனைவியை டின்னருக்கு அழைத்துள்ளார் போனி கபூர்.

ரெடியாகி வருவதாகச் சொல்லிவிட்டு ஸ்ரீதேவி பாத்ரூமுக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த போனி கபூர், கதவைத் தட்டியுள்ளார். உள்ளே இருந்து சத்தம் வரவில்லை. பின்னர், ஹோட்டல் உதவியாளர்களுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது, கழிவறையில் மயக்கமடைந்த நிலையில் அவர் கிடந்துள்ளார். மருத்துவமனையில் அவரை சோதித்த மருத்துவர்கள், முன்னரே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான தடயவியல் துறையினரின் அறிக்கையைத் துபாய் போலீஸ், அவரின் குடும்பத்தினர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது. அந்த அறிக்கையில், ஸ்ரீதேவி தற்செயலாகக் குளியல் தொட்டியில் மூழ்கி (accidental drowning) உயிரிழந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!