அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகனும்... அட்டப்பாடியின் பழங்குடி இளைஞன் மதுவும்! | trump jr india visit and Attapadi tribal Madhu's Murder

வெளியிடப்பட்ட நேரம்: 10:42 (27/02/2018)

கடைசி தொடர்பு:13:20 (27/02/2018)

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகனும்... அட்டப்பாடியின் பழங்குடி இளைஞன் மதுவும்!

ட்ரம்ப்

"இந்தியாவில் உங்களை அதிகம் கவர்ந்தது எது?" இதுதான் கேள்வி என்றால் உங்கள் பதில் என்னவாக இருக்கும் என்பதை யோசித்துக் கொண்டு இருங்கள். ஆனால், ஒருவர், ''இங்கு ஏழைகளுக்கெல்லாம் ஏழை இருக்கிறார்கள். அவர்களின் முகத்தில் இன்னமும் புன்னகை இருக்கிறது. இந்த மனநிலை உலகின் மற்ற நாட்டவர்களிடம் இல்லை. இது, இந்திய எதிர்காலத்தின் ஆற்றலை உணர்த்துவதாய் இருக்கின்றது" என்று சொன்னால் எப்படி இருக்கும். இதைக்கூறியது அமெரிக்காவே வெறுக்கும் அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்ப்பின் மகன் ஜூனியர் ட்ரம்ப்தான். இவரது பேச்சுக்கும், சென்னையில் மோடி பேசியதற்கும், அட்டப்பாடியில் மது எனும் பழங்குடி இளைஞனுக்கும் தொடர்பு இருக்கிறது என்றால் நம்புவீர்களா? பதில் 'ஆம்' என்பதுதான்.

டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா ஆகிய நகரங்களில் ’தி ட்ரம்ப் டவர்ஸ்’ என்ற பெயரில் பிரமாண்ட சொகுசு அபார்ட்மென்ட்களை விற்பதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும் இந்தியாவிற்கு நான்கு நாள்கள் பயணமாகக் கடந்த வாரம் வந்தார் ஜூனியர் டிரம்ப். அமெரிக்க அதிபரின் மகன் இந்தியாவிற்கு வியாபாரப் பயணமாக வந்திருந்த அதே வேளையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழக்கமாகக் கிடைக்கும் மோடியின் கட்டிப்பிடி வரவேற்பு ட்ரூடோவிற்கு அளிக்கப்படவில்லை. ட்ரூடோவை வரவேற்பதற்காக இணை அமைச்சராக இருக்கும் கஜேந்திர சிங் ஷெகாவத் அனுப்பி வைக்கப்பட்டார். 

'டிரம்ப் வந்துவிட்டார். நீங்கள் எப்போது வருகிறீர்கள்?' என்ற பதாகைகள் ட்ரம்ப், ஜூனியர் ட்ரம்ப்பை வரவேற்கும் விதமாகவும், அபார்ட்மென்ட்களை விற்பதற்காகவும் அந்தந்த நகரங்களில் விளம்பரங்களாக வைக்கப்பட்டன. ஒவ்வொரு நகரமாக ஜூனியர் ட்ரம்ப் விளம்பரத்திற்காகச் சென்றுகொண்டிருக்கையில், கனடா பிரதமர் ட்ரூடோவோ மத்திய அமைச்சர்களுடன் செல்லாமல் ஆக்ராவில் தாஜ்மஹாலுக்கும், சபர்மதி ஆஸ்ரமத்திற்கும் சென்றுகொண்டிருந்தார். 

அட்டப்பாடி மது

உலகின் அதி முக்கியமான இந்த இரண்டு நபர்களும், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நேரத்தில்தான், கேரளாவில் அந்தக் கொடூரமான சம்பவம் நிகழ்த்தப்பட்டது. கேரளாவின் அட்டப்பாடியைச் சேர்ந்த மது என்கிற பழங்குடி இளைஞர் 'அரிசி திருடிவிட்டார்' என்று குற்றம் சாட்டப்பட்டு அடித்துத் துன்புறுத்திக் கொல்லப்பட்டார். ட்ரம்ப் டவர்களில் அபார்ட்மென்ட் வாங்கியவர்களுக்கு ட்ரம்ப் ஜூனியர் டின்னர் விருந்து அளித்துக்கொண்டிருந்தபோது, தாஜ்மஹாலுக்கு முன்பு தனது மனைவி, குழந்தைகளுடன் ஜஸ்டின் ட்ரூடோ புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, மதுவைக் கட்டி வைத்து அந்த கொலைகாரர்கள், செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார்கள். 

ஜஸ்டின் ட்ரூடோவை மோடி வரவேற்கச் செல்லாதது கனடா மக்கள் மத்தியிலும், உலக அரங்கிலும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. அதற்குக் காரணம் ஜஸ்டின் ட்ரூடோ, சீக்கியர்களின் தனிநாடு கோரிக்கையான ‘காலிஸ்தான்’ உருவாக ஆதரவளித்ததாகச் சொல்லப்படுகிறது. 'மோடியும் அவரது பாரதிய ஜனதா கட்சியும் ‘அகண்ட பாரதம்’ என்ற லட்சியத்தை நோக்கிப் பயணிக்கையில், பிரிவினைக்கு ட்ரூடோ ஆதரவளிப்பது பி.ஜே.பி-யின் கொள்கைக்கு எதிராக இருக்கிறது' என மோடி கருதியிருக்கலாம். ‘மோடியின் அமைச்சரவையில் இருப்பதைவிட, ட்ரூடோ அமைச்சரவையில் நிறைய சீக்கியர்கள் இருக்கிறார்கள்’ என்பதும் காரணமாக இருக்கலாம்.

"நமது இரண்டு நாடுகளும்தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள். மக்கள் தொகையில் இந்தியாவும், நிலப்பரப்பில் கனடாவும் பெரியது" என்றார் ட்ரூடோ. ஆனால், ஜூனியர் ட்ரம்ப், "இந்தியாவிற்கு அடுத்த மிகப்பெரிய ஜனநாயக நாடாக அமெரிக்கா இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருப்பது எங்களுக்குப் பிடிக்கவில்லை. எனினும் பரவாயில்லை’ என்றார். 

"இந்தியாவில் தன்னைக் கவர்வது யார்?" என்ற கேள்வி ஜூனியர் ட்ரம்பிடம் முன்வைக்கப்பட்ட போது, "இந்தியாவில் ஏழைகளிலும் ஏழைகளாக இருக்கும் மக்களின் முகங்கள் இன்னும் புன்னகையுடன்தான் இருக்கின்றன" என்றார். 

அவரின் கருத்து பெரும்பாலான மேற்கத்திய நாடுகளின் இந்தியா குறித்த பார்வையோடு இணைந்துபோகின்றது. இந்தியாவில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கையில், ட்ரம்ப் மகனுக்கு இந்தியாவில் இருக்கும் ஏழைகள் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகின்றனரா?

ட்ரம்ப்

ஆனால், இங்கு என்ன நடக்கிறது? இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக இருக்கலாம்; கேரளா இந்தியாவிலேயே மிக அதிகமான படிப்பறிவுள்ள மக்கள் வாழும் மாநிலமாக இருக்கலாம். ஆனால், ஜனநாயகமும் படிப்பறிவும் தன் பசியைப் போக்க அரிசி திருடிய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனின் கொலையில் அவமானப்பட்டு நிற்கின்றன. 

ஜூனியர் ட்ரம்ப் சுட்டிக்காட்டும் ஏழைகளிலும் ஏழையாக இருக்கும் மது போன்ற மக்கள், 'ட்ரம்ப் ட்வர்ஸ்’ கட்டடத்தில் தங்குமிடம் கேட்கவில்லை; உண்பதற்கு உணவு கேட்டிருக்கிறார்கள். காந்தி தேசத்தில் உணவு திருடியவருக்கு மரணம் தண்டனையாக அளிக்கப்பட்டிருக்கிறது. 'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்' என்றார் பாரதி. மதுவும் இந்தியப் பிரஜைதான். என்ன அவருக்கு ஆதார் கார்டு இல்லாமல் இருந்து இருக்கலாம். சமீபத்தில் சென்னை வந்த பிரதமர், 'பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்' என்கிறார். அப்படியென்றால். மதுவுக்கு உணவு கொடுத்திருக்க வேண்டிய கடமை பிரதமராகிய மோடிக்கும் இருக்கிறது அல்லவா?

"நான் என் சிறு பசிக்காகத்தான் உன்னிடம் திருடினேன். நீயும் உன் பெரும் பசிக்காகத்தான் என்னை அடித்துத் தின்றாய் என்பதை ஒப்புக்கொள். என் காடு உன்னை ஆசிர்வதிக்கும்” என்று மது சொல்வதாய் மாரி செல்வராஜ் எழுதியிருக்கும் கவிதை, மதுவைக் கொன்றவர்களுக்கு பொருந்தும். யார் மதுவைக் கொன்றார்கள் என்ற கேள்விக்கு செல்ஃபி எடுத்து அடித்தவர்கள் மட்டும்தான் என்றால் அந்தப் பதில் மேம்போக்கானதே. எல்லாருக்கும் இதில் பங்குண்டு. ஏழைகள் புன்னகைக்கவில்லை ஜூனியர் ட்ரம்ப்.. தங்களின் வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். 

"மிஸ்டர் ஜூனியர் ட்ரம்ப், உங்கள் சகோதரி வரும்போது ஹைதராபாத்தில் உள்ள 200 பிச்சைக்காரர்களைக் காப்பகத்தில் தங்க வைத்தனர். நீங்கள்கூட, மது கொல்லப்பட்ட இடத்துக்குச் செல்வதாக அறிவித்திருக்கலாம். மதுவையும் யாராவது உங்கள் வருகைக்காகக் காப்பகத்தில் அடைத்து வைத்திருக்கலாம். உங்கள் அப்பாவான அமெரிக்காவின் அதிபரிடத்தில் சென்று கூறுங்கள். அவர் சுந்தர் பிச்சைகளை வெளியேற்ற பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். நாங்கள் பிச்சை எடுப்பதைத் தடுக்கப் போராடிக்கொண்டிருக்கிறோம்..."


டிரெண்டிங் @ விகடன்