`நான் கிரிக்கெட்டராக விரும்புகிறேன்... என்னால் மருத்துவம் படிக்க முடியாது!’ - உயிரை மாய்த்துக்கொண்ட 4-ம் ஆண்டு மாணவி

உத்தரகாண்ட் மாநிலத்தில், கிரிக்கெட் வீராங்கனையாக விரும்பிய மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்டார். 

மருத்துவ மாணவி தற்கொலை

உதாம்சிங் மாவட்டத்தில் உள்ள ஜாஸ்பூர் பகுதியைச் சேர்ந்தவர், ஷிவானி பன்சால். இவர், உத்தரகாண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் 4-ம் ஆண்டு மருத்துவம் பயின்றுவந்துள்ளார். இந்த நிலையில், அந்தக் கல்லூரி விடுதியில் உள்ள அறையில், கடந்த 25-ம் தேதி, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், அவரது அறையிலிருந்து 12 வரிகளில் அவர் எழுதிய கடிதம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். 

அந்தக் கடிதத்தில்,`என்னால் இதற்கு மேலும் போராட முடியாது. நான் மருத்துவம் படிக்க வேண்டும்  என்று விரும்பியதே இல்லை. நான் கிரிக்கெட் வீராங்கனை ஆகவே விரும்பினேன்’ என்று அந்த 22 வயது மாணவி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்துப் பேசிய மருத்துவக் கல்லூரி முதல்வர் சி.எம்.எஸ். ராவத், ``10 மற்றும் 12-ம் வகுப்புகளில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற ஷிவானியால், கல்லூரிப் படிப்பில் முழுக் கவனம் செலுத்த முடியவில்லை. வகுப்புகளுக்குச் சரியாக வராததால், அவர் பல பாடங்களில் தோல்வியடைந்தார். அதிகப்படியான மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக சிகிச்சைபெற்றுவந்தார்’ என்றார். பள்ளி அளவில் முதல் மதிப்பெண் எடுத்ததால், ஷிவானியை அவரது தந்தை ஹரிஷ் பன்சால் கட்டாயப்படுத்தி மருத்துவப் படிப்பில் சேர்த்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!