`ஒரு பருக்கை சோறுகூட மது வயிற்றில் இல்லை!’ - உடற்கூறு ஆய்வறிக்கை தகவல்

கேரள மாநிலம் அட்டப்பாடியில் 27 வயது பழக்குடியின இளைஞர் மது, கும்பல் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டார். மதுவின் உடற்கூறு ஆய்வறிக்கை முழுவதுமாக வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, அவரின் வயிற்றில் ஒரு பருக்கை சோறுகூட இல்லை என்று தெரிய வந்துள்ளது. சில காட்டுப்பழங்களும் வாழைப்பழத் துண்டு ஒன்றே ஒன்று மட்டுமே அவரின் வயிற்றுக்குள் இருந்துள்ளது. பல நாள்கள் பட்டினியாகக் கிடந்துள்ளதால், அவரின் எலும்புகளும் தசைகளும் மிகவும் பலவீனமான நிலையில் இருந்துள்ளன. வியாழக்கிழமை மது அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை திருச்சூர் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. சனிக்கிழமை அவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. 

கொலை செய்யப்பட்ட மது

இந்தியாவில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதால், சுமார் 3 மணி நேரம் உடற்கூறு ஆய்வு நடந்தது. அவரின் உடல் முழுவதும் காயம் இருந்துள்ளது. தலையிலும் பலத்த காயம் காணப்பட்டுள்ளது. மார்புக்கூடு இரண்டாக உடைந்துள்ளது. மதுவின் உள்ளுருப்புகள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த அறிக்கை வந்த பின், மேலும் சில உண்மைகள் தெரிய வரலாம். மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம், கேரள அரசிடம் சம்பவம் குறித்து அறிக்கை கேட்டுள்ளது. 

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு ஜாமீன் கிடைக்காத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.200 மதிப்புள்ள அரிசி திருடியதற்காக மதுவை அந்தக் கும்பல் காட்டுக்குள் சென்று பிடித்தது. அப்போது, அவர் சமையல் செய்து கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த அரிசி உணவை சமைத்து மது உண்டிருந்தால்கூட அவரின் வயிற்றில் ஒரு பருக்கை சோறாவது எஞ்சியிருந்திருக்கும். கடைசி வரை காய்ந்த வயிற்றுடன் அவர் உயிரை விட்டதுதான் வேதனையிலும் வேதனை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!