பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடியின் மேலும் ஒரு மோசடி அம்பலம்!

இந்தியாவில்  உள்ள பொதுத்துறை வங்கிகளில் கடன் கொடுப்பதில் இரண்டாவது இடத்திலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், மேலும் ரூ.1,300 கோடி மோசடி நடந்துள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கி

பி.என்.பி வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்ததாகப் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவரின் மனைவி அமி, சகோதரர் நிஷால் மற்றும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன உரிமையாளரும் நிரவ் மோடியின் மாமாவுமான மெகுல் சோக்ஷி ஆகியோர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், நிரவ் மோடி மற்றும் அவரின் குடும்பத்தினர் வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். 

நிரவ் மோடியின் அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனையில், நிரவ் மோடிக்குச் சொந்தமான ஆடம்பர கார்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், பண்ணை வீடுகள் உள்ளிட்ட பல கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். நிரவ் மோடிமீது விசாரணை நடைபெற்று வரும் இந்த நிலையில், பி.என்.பி வங்கியில் நிரவ்மோடி மேலும் ரூ.1,300 கோடி மோசடி செய்தது தற்போது தெரிய வந்துள்ளது. அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஷி கூடுதலாக ரூ.1,300 கோடி மோசடி செய்துள்ளனர். 

பி.என்.பி சார்பில் பங்குச் சந்தை கண்காணிப்பு அமைப்பான செபியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில், இதுவரை மொத்தம் ரூ.12,622 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!