`தமிழக மாணவர்கள் திறன் குறைந்தவர்கள்!' அதிர வைத்த என்.சி.இ.ஆர்.டி ஆய்வு முடிவு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, கற்றல் திறன் அளவு குறைந்துள்ளதாக என்.சி.இ.ஆர்.டி நடத்திய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. 'மாநிலக் கல்வித் திட்டத்தைப் புறக்கணிக்கும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது' எனக் கொதிக்கின்றனர் கல்வியாளர்கள். 

என்.சி.இ.ஆர்.டி

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி), நேஷனல் அசஸ்மென்ட் சர்வே (என்.எஸ்.எஸ்) மூலம் மாநில வழிக் கல்வியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. தமிழகத்தில் 350 பள்ளிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வு முடிவில், தமிழகத்தின் மாநிலக் கல்வி முறையில் படிக்கும் மாணவர்கள், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில், மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி) நிர்ணயித்திருக்கும், தேசிய சராசரி திறன் மதிப்பெண் அளவுக்கும்கீழ் உள்ளனர். தேசிய சராசரி திறன் அளவான 300 மதிப்பெண்ணுக்குத் தமிழக மாணவர்கள் 200 முதல் 240 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிலும், சமூக அறிவியல் பாடத்தில், தமிழக மாணவர்கள் 33 சதவிகிதம் மிகவும் பின்தங்கியுள்ளனர்' என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

தமிழக மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, கல்வியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "நீட் தேர்வு முறைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக்கொண்டு வருகிறோம். மத்திய பாடத்திட்டமே சிறந்தது என்ற தோற்றத்தை உருவாக்க முனைகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் என்.சி.இ.ஆர்.சி உருவில் வெளிப்படுகிறது. தமிழக மாணவர்களின் கற்றல் திறன் குறைவு என வெளி உலகுக்கு நிறுவப் பார்க்கிறார்கள். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

பிற மாநிலங்களைவிடவும் கல்வி உரிமைக்காகத் தமிழகம்தான் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது. பொதுவாக, தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறன்களை மதிப்பிடுவதற்குத்தான் என்.ஏ.எஸ் அமைப்பு ஆய்வை மேற்கொள்ளும். பத்தாம் வகுப்பு மாணவர்களின் திறன்களை மதிப்பிடுவது இதுவே முதல் முறையாகும். இதிலிருந்தே என்.சி.இ.ஆர்.டியின் நோக்கம் புரிகிறது" என்கின்றனர் கல்வியாளர்கள். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!