வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (28/02/2018)

கடைசி தொடர்பு:15:22 (28/02/2018)

லிஃப்ட் கொடுத்த தி.மு.க பிரமுகருக்கு நடந்த கொடூரம்!

திமுக பிரமுகர் கொலை

விழுப்புரம் மாவட்ட தி.மு.க முன்னாள் பிரதிநிதி லெனின் பாண்டியன் தேசிய நெடுஞ்சாலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

விழுப்புரம் கே.கே.சாலை கணபதி லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் டேனியல். இவர் மகன் லெனின் பாண்டியன் இன்று காலை திருவாமத்தூருக்குச் சென்றார். பின்னர் விழுப்புரத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த அவருடன் அடையாளம் தெரியாத நபர் ஒருவரும் வந்ததாகக் கூறப்படுகிறது. விழுப்புரத்துக்கும் திருவாமத்தூருக்கும் இடையே சானத்தோப்பு என்னும் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, லெனினின் வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நபர் கத்தியை எடுத்து லெனினின் வயிற்றிலும் விலா எலும்பிலும் சரமாரியாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது. நிலைதடுமாறி லெனின் கீழே விழுந்தவுடன் மர்ம நபர் தப்பியோடிவிட்டார். சம்பவ இடத்திலேயே லெனின் உயிரிழந்தார். அவருடன் வாகனத்தில் வந்தவர் லிஃப்ட் கேட்டு வந்தவரா அல்லது நண்பரா என்பது பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

படுகொலை செய்யப்பட்டுள்ள லெனின், தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதசிகாமணிக்கு நெருங்கிய நண்பர். மேலும், ஏற்கெனவே கொலை செய்யபட்ட நகரத் தி.மு.க செயலாளர் செல்வராஜின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.