வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (28/02/2018)

கடைசி தொடர்பு:19:00 (28/02/2018)

30 பாலியல் வழக்குகள்; 15 கொலைகள்! சிறையில் முடிந்த `சைக்கோ' ஜெய்சங்கரின் கதை

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிக்கிய 'சைக்கோ' ஜெய்சங்கர், நேற்று பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.

 'இரண்டு நாள்களுக்கு முன்பு சிறையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்தார் ஜெய்சங்கர். மனஅழுத்தம் தாங்காமல் பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்' என்கின்றனர் சிறை அதிகாரிகள். 

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள பனங்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் என்ற ‘சைக்கோ’ ஜெய்சங்கர்'. லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தவர், சீரியல் கில்லராவும் பாலியல் வன்கொடுமைச் செயல்களிலும் ஈடுபட்டு வந்தார். 2009-ம் ஆண்டு, பெண் போலீஸ் காவலர் ஒருவரைப் வன்கொடுமை செய்த வழக்கில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல், கர்நாடக மாநிலத்தில் உள்ள பிஜப்பூர், தேவாங்கர், சித்தரதுர்கா ஆகிய மாவட்டங்களில் 11 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கும் மூன்று படுகொலை வழக்குகளும் ஜெய்சங்கர்மீது பதியப்பட்டன.

இந்த வழக்குகளில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். 2013-ம் ஆண்டு சிறையிலிருந்து தப்பினார். 30 அடி உயர சுவரையும் மின்வேலி ஆகியவற்றைத் தாண்டி, ஜெய்சங்கர் தப்பித்துச் சென்றது சிறைக் காவலர்களுக்கு அதிர்ச்சியளித்தது. இந்தச் சம்பவத்தில் 11 போலீஸார் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதன்பிறகு மீண்டும் கர்நாடகப் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, தனி கொட்டடியில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், தொடர் மனஅழுத்தம் காரணமாக நேற்று காலை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதை எதிர்பார்க்காத சிறைக் காவலர்கள், ஜெய்சங்கரை மீட்டு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் இறந்துவிட்டதாகத் தகவல் வெளியானது. 

30 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 15 கொலை, கொள்ளை வழக்குகள், 25-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் என நீண்ட க்ரைம் ரெக்கார்டு கதையைக் கொண்ட ஜெய்சங்கரின் வாழ்க்கை, 'சைக்கோ ஷங்கர்' என்ற பெயரில் கன்னடத்தில் திரைப்படமாக வெளிவந்தது. இவரின் தந்தை மாரிமுத்துவும் சாதாரணப்பட்டவரல்ல. ஜெய்சங்கரைப் போலவே, பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர். 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற மாரிமுத்து, மனநோயால் பாதிக்கப்பட்டு சிறையிலேயே உயிரிழந்தார்.