ரூ.15,000 கோடி கடன்! - திவாலானதாக அறிவிக்கக்கோரும் ஏர்செல் 

கடன் சுமை அதிகரித்ததால் ஏர்செல் நிறுவனத்தைத் திவாலானதாக அறிவிக்கக்கோரி அந்நிறுவனம் சார்பில் தேசிய கம்பெனி தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

AIRCEL

 

இந்திய தொலைத்தொடர்புத்துறை சந்தையில் முக்கிய நிறுவனமாக இருந்த ஏர்செல் கடன் சுமையால் தத்தளித்து வருகிறது. அந்நிறுவனத்துக்கு சுமார் ரூ.15,000 கோடி கடன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏர்செல் நிறுவன சேவை பல இடங்களில் கிடைக்கவில்லை. செல்போன் டவர் உரிமையாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை பாக்கி இருந்ததே இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. இதையடுத்து ஏர்செல் நிறுவனம் சேவைகளை நிறுத்திக் கொள்ளும் என்று தகவல் வெளியானது. ஆனால், அதை அந்நிறுவனம் மறுத்தது. கடன் இருப்பது உண்மைதான். அதற்காகச் சேவையை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை என்று நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று மீண்டும் ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவு தலைமைச் செயல் அதிகாரி அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். செல்போன் கோபுரங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்களுடன் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று அவர் அறிவித்தார். வாடிக்கையாளர்கள் வேறு ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறும் கூறினார். இது வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தச் சூழலில், ஏர்செல் நிறுவனத்தை திவாலானதாக அறிவிக்கக்கோரி மும்பை தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் அந்நிறுவனம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!