வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (28/02/2018)

கடைசி தொடர்பு:21:31 (28/02/2018)

ஜி.டி.பி வளர்ச்சி 7.2 சதவீதமாக உயர்வு!

நடப்பு நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

GDP

 

மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) என்பது ஒரு நாட்டின் பொருளாதார நிலையைக் கணக்கிட உதவுவது ஆகும். 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தது. இதனால், நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன்பிறகு இந்தியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சிக்குள்ளானது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.4 என்ற அளவில் கீழே சென்றது. இது கடும் விமர்சனத்துக்குள்ளானது. 

அதன்பிறகு பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகப் பொருளாதார வளர்ச்சி அதிகரித்தது. ஜி.டி.பி-யும் உயர்ந்தது. நடப்பு நிதி ஆண்டின் (2017-18)  மூன்றாவது காலாண்டான அக்டோபர்-டிசம்பர் காலத்தில் ஜி.டி.பி 7.2 சதவிகிதமாக இருக்கிறது. இது இந்த நிதியாண்டில் அதிக வளர்ச்சியாகும்.

அரசு செலவிட்ட தொகை அதிகரித்துள்ளது, தனியார் நுகர்வு அதிகரித்திருப்பது, வாகன விற்பனை கூடியிருப்பது ஆகியவையே ஜி.டி.பி வளர்ச்சிக்கு முக்கியப் பின்னணிகளாக இருப்பதாக பொருளாதார நிபுணர் அபிஷேக் உபாத்யாயே தெரிவித்தார். இதற்கிடையே, வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்து வருகிறது. அந்தச் சமயத்தில் நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி நிகழ்ந்திருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.