பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொடரும் மர்மம்; அதிகாரி ஒருவர் பலி

பஞ்சாப் நேஷனல் வங்கியின், லக்னோ கிளையில் பணியாற்றி வந்த தலைமைக் காசாளர் (கேஷியர்) ரோஹித் ஸ்ரீவஸ்தவா என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 

பஞ்சாப் நேஷனல் பேங்க்


இந்தியாவின் இரண்டாவது வங்கி என்ற பெயருக்குப் பொருத்தமான பஞ்சாப் நேஷனல் வங்கி, வங்கி மோசடி ஊழலில் முதல் இடத்தில் முன்னேறி உள்ளது. இந்த வங்கியின் மும்பைக் கிளையில், பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன உரிமையாளரும் நிரவ் மோடியின் மாமாவுமான மெகுல் சோக்ஷி ஆகியோர் ரூ.11,400 கோடி மோசடி செய்துள்ளனர். 

வங்கி மோசடிக்கு உதவிய வங்கி அதிகாரிகள் மற்றும் மோசடி ஜாம்பவான்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ நகரில் செயல்பட்டு வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில், தலைமைக் காசாளராகப் (கேஷியர்) பணியாற்றி வந்த ரோஹித் ஸ்ரீவஸ்தவா என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 

பல்ராம்பூர் மாவட்டம், மங்காபூர் சாலையில் உள்ள கால்வாய் பாலம் ஒன்றின் கீழ் நீரில் மிதந்த நிலையில் ரோஹித் ஸ்ரீவஸ்தவா உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 28 வயதே ஆகும் ரோஹித் ஸ்ரீவஸ்தவா தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவரது உடலை போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அங்கு உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். 

கடந்த மூன்று நாள்களுக்கு முன், பி.என்.பி வங்கி சார்பில் பங்குச் சந்தை கண்காணிப்பு அமைப்பான செபியிடம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஷி கூடுதலாக ரூ.1,300 கோடி மோசடி செய்துள்ளார்கள் என்பது தெரியவந்த நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!