வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (01/03/2018)

கடைசி தொடர்பு:20:00 (01/03/2018)

`ம.பி. இடைத்தேர்தல் தோல்வி ஆணவத்துக்குக் கிடைத்த பாடம்!' - பா.ஜ.க-வை விளாசும் ராகுல்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க-வுக்குக் கிடைத்த தோல்வி, அவர்களின் ஆணவத்துக்குக் கிடைத்த பாடம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Rahul

 

மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள கோலாரஸ், முங்கோலி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குச் சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. முடிவில் இரு இடங்களையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. கோலாரஸ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திர சிங் யாதவ், பா.ஜ.க வேட்பாளர் தேவேந்திர ஜெயினை 8,086 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். முங்கோலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரஜேந்திர சிங் யாதவ் 2,124 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் பாய் சஹாப் யாதவை வீழ்த்தி வெற்றிபெற்றார். 

இவ்விரு தொகுதிகளில் கிடைத்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. சமீபத்தில் ராஜஸ்தானில் அஜ்மீர், அல்வார் ஆகிய தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. இடைத்தேர்தல் வெற்றி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், “இது நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி. ஆணவத்துக்கும், மோசமான நிர்வாகத்துக்கும் கிடைத்த தோல்வி. முதலில் ராஜஸ்தான். இப்போது மத்தியப்பிரதேசம். இது மாற்றம் வேண்டுமென மக்கள் விரும்புவதைக் காட்டுகிறது” என்று கூறியுள்ளார். 

அதேசமயம், கோலாரஸ், முங்கோலி தொகுதிகளில் 2013-ம் ஆண்டு கிடைத்த வாக்குகளை விடவும் இப்போது காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சதவிகிதம் குறைந்திருக்கிறது.