“திரும்பி வந்துவிடு மகனே!” - தாயின் கண்ணீரால் மனம் திருந்திய இளைஞர்

பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த காஷ்மீர் இளைஞர், தாயின் கண்ணீர் கோரிக்கையை ஏற்று வீடு திரும்பியிருக்கிறார்.

kashmir mother

File Photo

காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதி, மக்கள் சுயநிர்ணய உரிமை கோரி போராடிவருகிறார்கள். அங்கு ராணுவத்தைக் குவித்துள்ள இந்தியா, போராட்டங்களைக் கட்டுப்படுத்திவருகிறது. அந்தப் பகுதிகளில், இளைஞர்கள் அடிக்கடி பாதுகாப்புப் படையினர்மீது கல்வீசும் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. மேலும், அங்கு பல போராளிக் குழுக்கள் மற்றும் பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த இயக்கங்களில், அந்தப் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் இணைவதும் நடக்கிறது. 

அவ்வாறு ஆயுதம் தாங்கிய குழுக்களில் இணையும் இளைஞர்களை வன்முறைப்பாதையிலிருந்து திரும்ப அழைத்துவருவதற்கான முயற்சிகளை காஷ்மீர் அரசு எடுத்துவருகிறது. சம்பந்தப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்மூலம் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பெற்றோர்கள், தங்கள் மகன்களைக் கண்ணீருடன் திரும்ப வீட்டுக்கே அழைப்பது போன்ற வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வெளியிடப்படுகின்றன. இதைப் பார்த்து மனம் திருந்தும் இளைஞர்கள், ஆயுதவழிப் போராட்டத்தைக் கைவிட்டு மனம் திருந்தி வீடு திரும்புகிறார்கள்.

அந்த வகையில், சமீபத்தில் ஆயுதம் தாங்கிய குழுவில் இணைந்த ஓர் இளைஞரின் தாயார், “திரும்ப வந்துவிடு மகனே..!” எனக் கண்ணீருடன் மன்றாடும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அதைப் பார்த்து நெகிழ்ந்த அந்த இளைஞர், மனம் திருந்தி வீடு திரும்பியிருக்கிறார். இந்தத் தகவலை காஷ்மீர் டி.ஜி.பி.,வைத் தெரிவித்தார். அந்த இளைஞரின் பாதுகாப்பு கருதி, அவருடைய பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதுவரை, இதுபோல 12 இளைஞர்கள் வன்முறைப்பாதையைக் கைவிட்டு திரும்பி வந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!