மாதச் சம்பளக்காரர்கள் வருமான வரியைக் குறைக்க டிப்ஸ்... மார்ச் அலர்ட்!

இதோ மார்ச் மாதம் தொடங்கிவிட்டது. இந்த மாதம் வந்தாலே வருமானவரி தொடர்பாக நிதி ஆலோசகர்களை நோக்கித்தான் சம்பளதாரர்கள் ஓடிக்கொண்டிருப்பார்கள். வரி கட்டுவது, ஒவ்வொரு குடிமகனின் கடமை. அதேநேரம், குடிமக்கள் அனைவரும் வரிக்கழிவுக்காக அரசாங்கம் கொடுக்கும் சலுகைகளை அறிந்திருப்பதும், அவற்றை முறையாகச் செயல்படுத்துவதும் அவசியமே! எனவே, மாத வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரிக்கழிவுச் சலுகைகள் குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்காக, ஆடிட்டர் சத்தியநாராயணனைச் சந்தித்தோம்...

``உங்கள் அலுவலகத்தில் பிடித்தம் செய்யப்படும் மாதாந்திர பி.எஃப் பணத்தை, வரிக்கழிவுச் சலுகைக்காக செக்‌ஷன் 80C-யின்படி கணக்கில் காட்டலாம். தற்போது குழந்தைகளின் படிப்புக்குச் செலவழிப்பதற்காகவே கூடுதலாகச் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருக்கிறோம். எனவே, நம் துயர் தீர்ப்பதற்காகவே அரசாங்கமானது, கல்விக் கட்டணத்தை வரிக்கழிவுப் பட்டியலில் சேர்த்துள்ளது. கல்விக் கட்டணம் என்றதும் பொத்தாம்பொதுவாக பள்ளியிலோ கல்லூரியிலோ நாம் கட்டும் ஆண்டுக் கல்விக் கட்டணத்தை முழுமையாகக் கணக்கிடக் கூடாது. உதாரணமாக, ஒரு கல்லூரியில் கட்டும் பணத்தில், கல்லூரிப் பேருந்துக் கட்டணம், சீருடைக் கட்டணம், மதிய உணவுக் கட்டணம் என வேறு பல கட்டணங்களும் இணைந்திருக்கும். அவற்றில் கல்விக்கான கட்டணத்தை மட்டும் வரிக்கழிவுக்குக் கணக்கில் காட்டலாம்.

வருமான வரி

தபால் அலுவலகங்களில் நேஷனல் சேவிங்ஸ் திட்டத்தில் சேர்ந்திருந்தால் அதில் கட்டும் பணத்தை வரிக்கழிவுக்குப் பயன்படுத்தலாம். அதேபோல, தபால்நிலையம்/வங்கியில் பப்ளிக் புராவிடென்ட் ஃபண்டில் 15 ஆண்டுகள் லாகின் பீரியடில் சேமிக்கப்படும் முதலீட்டுக்கு வரிச்சலுகை உண்டு.

அடுத்ததாக, தபால்நிலையத்தில் தொடங்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமான செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் சேமிக்கப்படும் பணத்தை வரிக் கழிவுக்குக் கணக்கு காட்டலாம். இ.எல்.எஸ்.எஸ்  மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. ஆனால், அத்தகைய மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு மூன்று ஆண்டுகள் லாகின் பீரியடு உண்டு. வீடு வாங்க கடன் பெற்றிருந்தால் அதைத் திருப்பிக் கட்டும் அசலை 80C-ன் கீழ் வரிக் கழிவுக்குக் கணக்கு காட்டலாம். வீட்டுக் கடனுக்காகக் கட்டும் வட்டித்தொகையை வருமானத்திலிருந்து அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை கழித்துக்கொள்ளலாம்.

அடுத்ததாக, ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களுக்காகச் செய்யப்படும் முதலீட்டை வரிக்கழிவில் கணக்குக் காட்டலாம். இந்த ஆயுள்  காப்பீட்டை, வருமானவரி கட்டுபவருக்கு மட்டுமல்லாமல் அவரின் குடும்பத்தினருக்கும் பாலிசி எடுத்து அவர்களது பாலிசிக்குக் கட்டும் தொகையையும் கணக்கில் காட்ட முடியும். மேற்கூறிய அனைத்து வரிக்கழிவுச் சலுகைகளிலிருந்தும் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை மட்டும் வரிக்கழிவுக்கு க்ளெய்ம் செய்யலாம்.

வருமான வரி

இதைத் தவிர்த்து, செக்‌ஷன் 80D-ன்படி, மருத்துவக் காப்பீட்டு முதலீட்டை 25,000 ரூபாய் வரை கணக்கில் காட்டலாம். அந்த மருத்துவக் காப்பீடு முதியவர்களுக்கானது எனில், 30,000 ரூபாய் வரை கணக்கில் காட்டலாம். மருத்துவக் காப்பீடு எடுத்தவரின் பெற்றோர் சீனியர் சிட்டிசன் என்ற வகையில் இருந்தால், அவர்களின் பெயரில் எடுக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுக்கும் 30,000 ரூபாய் வரை வரிக்கழிவுக்குக் கணக்குக் காட்டலாம். 

குறிப்பிட்ட சில நன்கொடைகளுக்கு செக்‌ஷன் 80G-ன்படி 50 சதவிகிதம் வரை வருமான வரிக்கழிவுக்குக் கணக்குக் காட்டலாம். அதேபோல், முதலமைச்சர் நிவாரண நிதி, பிரதமர் நிவாரண நிதி போன்றவற்றுக்கு நன்கொடையாக அளிக்கப்படும் தொகைக்கு 100 சதவிகிதம் வரை வரிக்கழிவுச் சலுகை உண்டு" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!