`சமையலில் டேஸ்ட் இல்லை' - விவாகரத்துக்கு கணவன் சொன்ன விநோத காரணம்!

மனைவியின் சமையல் டேஸ்ட்டாக இல்லை எனக் கூறி, ஒருவர் விவாகரத்து கோரியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

விவாகரத்து

மும்பை சாண்டாகுரூஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவர், மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "என்னுடைய மனைவி பணிவாக நடந்துகொள்ளவில்லை. காலையில் சீக்கிரமாக எழுப்பினால், எனது பெற்றோரையும் என்னையும் திட்டுகிறார். வேலைக்குச் சென்றுவிட்டு 6 மணிக்கு வரும் அவர், வந்தவுடன் தூங்கிவிடுகிறார். இரவு 8.30 மணிக்கு மேல்தான் சமைக்கவே ஆரம்பிக்கிறார். அவரது சமையலும் டேஸ்ட்டாக இல்லை. போதாக்குறைக்கு, உணவை குறைவாகச் சமைக்கிறார். நான் வேலைக்குச் சென்றுவந்தால் ஒரு டம்ளர் தண்ணீர்கூட தருவதில்லை. எனவே,  மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றுத் தர வேண்டும்" என்று கூறியுள்ளார். கூடவே, சாட்சியாக தனது தந்தையின் வாக்குமூலத்தையும் இணைத்துள்ளார். 

இதற்குப் பதில்மனு தாக்கல்செய்துள்ள அவரது மனைவி, "என் கணவர் கூறுவது பொய். கணவரும், அவரது பெற்றோரும்தான் என்னை கீழ்த்தரமாக நடத்துகிறார்கள். அவர்களுக்குப் போதுமான உணவை சமைத்த பின்புதான் வேலைக்குச் செல்கிறேன்" என்று கூறியுள்ளார். இதற்கிடையே, வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம், விவகாரத்து தர மறுத்துவிட்டது. மேலும், தாமதமாக எழுந்திருப்பது, சுவையாக சமைப்பதில்லை என்பவையெல்லாம் கொடுமைப்படுத்துவது கிடையாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடிசெய்தது. இந்த விநோத வழக்கு, நீதிமன்ற வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!