`மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்?’ - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டப்பேரவைகளுக்கு  சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

Photo Credit: ANI

வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களிலும், முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. திரிபுராவில், ஆளும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி வெற்றிபெறும் முனைப்பில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன. அம்மாநிலத்தில், கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. 
மேகாலயாவில், காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிசெய்துவருகிறது. இதனால், அம்மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்ற பா.ஜ.க தீவிரம் காட்டிவருகிறது. அதேநேரம், மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் முனைப்புக் காட்டிவருகிறது. 1972-ல் மேகாலயா மாநிலம் உருவாக்கப்பட்ட பின்னர், காங்கிரஸ் அல்லாத அரசு ஒரே ஒரு முறை மட்டுமே முழுமையாக 5 ஆண்டுகள் பதவி வகித்தது. தற்போதைய முதலமைச்சர் முகுல் சங்மா, 5 ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவுசெய்த 3-வது முதலமைச்சர் ஆவார்.

மேகாலயாவில், பா.ஜ.க 47 தொகுதிகளில் போட்டியிட்டது. நாகாலாந்தைப் பொறுத்தவரை பா.ஜ.க., 20 தொகுதிகளில் போட்டியிட்டது. மற்ற தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டது. அதேபோல, அம்மாநிலத்தில் வலுவாக உள்ள என்.பி.எஃப். கட்சி, பா.ஜ.க-வுடனான 15 ஆண்டுகால உறவை முறித்துக்கொண்டது. இது, பா.ஜ.க-வுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இருப்பினும், தேர்தலுக்குப் பின்னர் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கலாம் என்று பேசப்படுகிறது. திரிபுராவில், பிப்ரவரி 18-ம் தேதியும், மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் கடந்த 27-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!