“எனக்கும் பங்கு இருக்கு!” - நண்பரிடம் பெருமையடித்துக்கொண்ட கௌரி லங்கேஷின் கொலையாளி

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலையில் தொடர்புடைய  முதல் நபரை சிறப்பு விசாரணைக்குழுவினர் கைது செய்துள்ளனர். 

கௌரி

 

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கௌரி லங்கேஷ். பத்திரிகையாளரான இவர் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி தன் வீட்டின் முன்பு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் வலதுசாரி எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அதனால்தான் இவர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று பேசப்பட்டது. இந்தக் கொலைக்கு நாடுமுழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து இதில் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிய சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.

இந்நிலையில், கொலை நடந்து சுமார் 5 மாதங்களுக்குப் பின்னர், கொலையில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முதல் கைது இதுவாகும். அவரின் பெயர் நவீன் குமார். வயது 38. இவர் இந்து யுவசேனா என்ற அமைப்பைச் சேர்ந்தவர். இவர் சிக்கிய பின்னணி வருமாறு: நவீன் குமார் கடந்த சில தினங்களுக்கு முன் பெங்களூரு மஜிஸ்டிக் பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். அவரை ஜனபாரதி காவல் நிலைய போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் .32 காலிபர் ரக துப்பாக்கி இருப்பது தெரியவந்தது. 15 தோட்டாக்களும் அவரிடமிருந்தன. இதையடுத்து அவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். 


கௌரி லங்கேஷைக் கொலை செய்யப் பயன்படுத்திய துப்பாக்கியும் நவீன் குமாரிடம் இருந்த துப்பாக்கியும் ஒரே ரகம் என்பதால் போலீஸாருக்குச் சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவருக்கு கௌரி லங்கேஷ் கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. செப்டம்பர் 3 மற்றும் கொலை நடந்த 5-ம் தேதி காலை இவர் கௌரி லங்கேஷ் வீட்டின் அருகே நோட்டம் விட்டுள்ளார். ஹெல்மெட்டுடன் இவர் மோட்டார்சைக்கிளில் வந்துசெல்லும் காட்சி, அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. கொலையாளிகள் அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்லவும் உதவியிருக்கிறார். 

நவீன்குமார் தற்போது சிறப்பு விசாரணைக்குழுவின் கஸ்டடியில் உள்ளார். நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 8 நாள் காவல் வழங்கப்பட்டுள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில் இந்தக் கொலையில் 4 பேருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களின் முக அடையாளங்களை இவர் மூலம் வரைந்து பெற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கொலைக்குப் பிறகு தனக்கும் இந்தக் கொலையில் சம்பந்தம் இருப்பதாகத் தன் நண்பர்களிடம் நவீன் குமார் பெருமையடித்துக் கொண்டதாகவும் சிறப்பு விசாரணைக் குழுவினர் கூறினார்கள். எழுத்தாளர் கல்புர்கி, கம்யூனிஸ்ட் தலைவர் கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகியோரின் கொலைக்கும் இந்தக் குழுவுக்கும் தொடர்பிருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!