வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (04/03/2018)

கடைசி தொடர்பு:13:30 (04/03/2018)

ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கு - மும்பையில் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை!

ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை, மும்பை அழைத்துச் சென்று சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. 

Photo Credit: ANI

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்குச் சாதகமாக வெளிநாட்டு முதலீடுகளுக்கு, விதிமுறைகளை மீறி தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ என இரண்டு விசாரணை அமைப்புகளும் வழக்குப் பதிவு செய்திருந்தன. இதையொட்டி கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டில் பலமுறை அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. கார்த்தி சிதம்பரத்திடம் டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் வைத்து பலமுறை விசாரணையும் நடைபெற்றது. இந்நிலையில், லண்டன் சென்று திரும்பிய கார்த்தி சிதம்பரம் கடந்த 28-ம் தேதி சென்னையில் கைது செய்யப்பட்டார். டெல்லி அழைத்துச் செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை, 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐக்கு அனுமதி கிடைத்தது.

இதையடுத்து, அவரைக் கஸ்டடியில் எடுத்த சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வாக்குமூலம் அளித்த  இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர்  முகர்ஜி ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது. அதன்படி, மும்பை பைக்குலா சிறைக்கு கார்த்தி சிதம்பரம் அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டது. இந்திராணி முகர்ஜி  மற்றும் பீட்டர் முகர்ஜி ஆகியோர் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் நிறுவனர்கள் ஆவர். மகளைக் கொலை செய்த வழக்கில் அவர்கள் மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தனித்தனியாக அவர்கள் இருவர் முன்னிலையிலும், கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.