வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (05/03/2018)

கடைசி தொடர்பு:11:40 (05/03/2018)

இந்து பெண்ணுக்கு எம்.பி பதவி! - ஆச்சர்யப்படுத்திய பாகிஸ்தான்

பாகிஸ்தானில் முதல் முறையாக இந்து மதத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் ஒருவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 'செனட்' உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

கிருஷ்ண குமாரி

 

பாகிஸ்தானில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராகவும் இந்துக்கள் சிறுபான்மையினராகவும் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில்தான், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற 'செனட்' உறுப்பினர் தேர்தலில், நவாஸ் ஷெஃரீப்பின் முஸ்லிம் லீக் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து, கிருஷ்ண குமாரி கோலி எனும் இந்து பெண் முதல் முறையாகச் செனட் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 39 வயதாகும் கிருஷ்ண குமாரி, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். 

கிருஷ்ண குமாரி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது, பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கும் பட்டியலின சமூகத்துக்கும் கிடைத்த பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான், சிந்து மாகாணத்தில் உள்ள தார் மாவட்டத்தில் நாகர்பார்கர் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண குமாரி. இவரின் தந்தை விவசாயம் பார்த்து வருகிறார். இவருக்கு, 16 வயதில் லால்சந்த் என்பவருடன் திருமணம் நடந்தது. இருப்பினும் தனது படிப்பைத் தொடர்ந்தார். மேலும், சிந்து பல்கலைக்கழகத்தில் சமூகவியல் முதுகலைப் பட்டம் பெற்றார். 

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்க்வா, பலோசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்கள் ‘செண்ட்’ எனப்படும். இந்த மாகாணங்களில் 52 பேர் மேல்சபை உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து, 52 புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில், போட்டியிட்டு முதல் பெண் உறுப்பினராக, பட்டியலின வகுப்பைச் சேர்ந்த கிருஷ்ண குமாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.