வெளியிடப்பட்ட நேரம்: 13:49 (05/03/2018)

கடைசி தொடர்பு:13:49 (05/03/2018)

"ஸ்ரீதேவி முதல்முறை வெளிநாட்டில் தனியாகத் தங்கினாள்... இப்படி ஆகிவிட்டதே!" - மனம் திறந்த போனிகபூர்

டிகை ஸ்ரீதேவி, கடந்த 24-ம் தேதி துபாயில் மரணமடைந்தார். தங்கியிருந்த ஹோட்டல் கழிவறையில் பாத்டப்பில் மூழ்கி அவர் உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் உடல் தாய்நாடு கொண்டுவரப்பட்டு மும்பையில் தகனம் செய்யப்பட்டது. ஸ்ரீதேவி இறந்துகிடந்த தருணம் குறித்து, கணவர் போனி கபூர் தன் 30 ஆண்டுகால நண்பரும் பங்கு வர்த்தக நிபுணருமான கோமல் நெக்தாவிடம் முதல்முறையாகப் பகிர்ந்துகொண்டார். போனி கபூர் தன்னிடம் கூறிய விஷயங்களை, கோமல் நெக்தா தன் ப்ளாக் பக்கத்தில் எழுதியுள்ளார்...

நடிகை ஸ்ரீதேவி அஸ்தி கரைப்பு

`துயரம் நடக்கவிருந்த அன்று காலையில் நான் ஸ்ரீதேவியுடன் பேசினேன். பப்பா (ஸ்ரீதேவி, போனி கபூரை இப்படித்தான் அழைப்பார்) `நான் உங்களை ரொம்ப மிஸ் செய்கிறேன்' என்று சொன்னாள். `நானும் உன்னை மிஸ் செய்கிறேன்' என்றேன். கடந்த 24 ஆண்டுக்காலத்தில் ஒருநாள்கூட அவளை அந்நிய மண்ணில் தனியாக விட்டது கிடையாது. இருமுறை நியூஜெர்சி, வான்கூவர் போன்ற நகரங்களுக்குப் படக்குழுவினருடன் அவள் போயிருக்கிறாள். முதல்முறையாக 23, 24-ம் தேதிகளின்தான் நான் இல்லாமல் வெளிநாட்டுக்கு அவள் தனியாகச் சென்றாள்.

துபாயில் ஜான்விக்காக சில பொருள்களை வாங்க வேண்டும் என்று அவள் விரும்பினாள். அதனால் நான் தடுக்கவில்லை. எனக்கு லக்னோவில் முக்கியமான வேலை இருந்தது. அதனால், நான் தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். குஷியுடன் நான் மும்பை திரும்பியதும், ஜான்வியும் என்னிடம் அவளது அம்மாவைப் பற்றி மிகவும் கவலைப்பட்டாள். `பாஸ்போர்ட் போன்ற முக்கியமான ஆவணங்களை எங்கேயாவது மறந்து வைத்துவிடுவார். நீங்கள் போய்  அழைத்து வாருங்கள்' என்று என்னிடம் ஜான்வி சொன்னாள்.

இதையடுத்தே நான் மீண்டும் துபாய் செல்ல முடிவெடுத்தேன். ஆனால், நான் காலையில் ஸ்ரீதேவியிடம் பேசியபோது இதை அவளிடம் கூறவில்லை. பிறகு, மாலை 3:30 மணி ஃப்ளைட்டில் புறப்பட்டேன். துபாய் நேரப்படி மாலை 6:20 மணிக்கு ஹோட்டலுக்குப் போய்விட்டேன். கதவைத் திறந்ததும் எதிரே நான் நின்றதால் சந்தோஷம் தாங்காமல் என்னைக் கட்டியணைத்துக்கொண்டாள். இதற்கு முன் ஒருமுறை பெங்களூரில் வைத்து இதேபோல் அவளுக்கு சர்ப்ரைஸ் அளித்துள்ளேன்.

பிறகு, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அன்றைய தினத்தில் அவளுக்கு `ரொமான்டிக் டின்னர்' கொடுக்க விரும்பினேன். அவள் ரெடியாகிவிட்டு வருவதாக பாத்ரூமுக்குள் சென்றாள். நான் டிவி பார்த்துக்கொண்டிருந்தேன். சனிக்கிழமை  என்பதால் ரெஸ்டாரென்ட்களில் கூட்டம் அலைமோதும். அதனால் சீக்கிரம் குளித்துவிட்டு வருமாறு கூறினேன். இரவு 8 மணியளவில், `ஜான்... ஜான்' (ஸ்ரீதேவியை போனி கபூர் இப்படித்தான் அழைப்பார்) என்று இருமுறை சத்தம் போட்டேன். உள்ளேயிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. மீண்டும் ஒருமுறை கத்திக் கூப்பிட்டும், பதில் வரவில்லை. பாத்ரூம் கதவைத் தள்ளினேன். அது திறந்துகொண்டது. உள்ளே தாழிடப்படவில்லை. உள்ளே பாத்டப்பில் ஸ்ரீதேவி முழுமையாக மூழ்கிப்போயிருந்தார். எனக்கு உலகமே இடிந்து விழுந்துவிட்டதுபோல இருந்தது' என்று கூறியதாக எழுதியுள்ளார். 

மேலும் கோமல் நெக்தா தன் ப்ளாக்கில், `முதலில் உள்ளே விழுந்து மயக்கமடைந்திருக்கலாம் அல்லது மயக்கமடைந்து விழுந்து மூழ்கியிருக்கலாம். ஆனால், எப்படி நடந்தது என்பதுதான் தெரியவில்லை. ஏனென்றால், அவர் தப்பிப்பதற்காக எந்தப் போராட்டத்தையும் அங்கே நடத்தவில்லை. ஒரு நிமிடத்தில் மூச்சு நின்றுவிட்டது. ஒரு சொட்டுத் தண்ணீர்கூட பாத்டப்பில் இருந்து வெளியே சிந்தவில்லை' என்றும் குறிப்பிட்டுள்ளார். 

நடிகை ஸ்ரீதேவியின் அஸ்தி, முதலில் ராமேஸ்வரத்தில் கரைக்க உள்ளதாகச் சொல்லப்பட்டது. ஆனால், ஸ்ரீதேவி தனக்கு அடையாளம் கொடுத்த சென்னை மீது மிகுந்த பற்றும் பாசமும் வைத்திருந்தார் என்பதால், அவரின் அஸ்தியை சென்னை கடலிலேயே கரைக்க போனி கபூர் முடிவுசெய்தார். ஈஞ்சம்பாக்கத்தில் ஸ்ரீதேவிக்கு பண்ணை வீடு உள்ளது. ஸ்ரீதேவி அஸ்தியுடன் மகள் ஜான்வி, குஷி ஆகியோருடன் போனி கபூர் சென்னை வந்தார். ஈஞ்சம்பாக்கத்தில் சிறிய சடங்கு நடத்தி, ஸ்ரீதேவி அஸ்தியைக் கரைத்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்