வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (05/03/2018)

கடைசி தொடர்பு:17:40 (05/03/2018)

`கணவருடன் கருத்துவேறுபாடு!’ - 3 வயது மகளை குளத்தில் மூழ்கடித்துக் கொன்ற மனைவி கைது

கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகத் தனது 3 வயது மகளை குளத்தில் மூழ்கடித்துக் கொன்ற மனைவியை போலீஸார் கைதுசெய்தனர்.

கைது

 
ஒடிசாவின் ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள முக்பால் கிராமத்தைச் சேர்ந்தவர், சோனி பெஹேரா (26). விழாக்களின்போது டிரம்ஸ் வாசிக்கும் தொழிலில் அவரது கணவர் ஈடுபட்டுள்ளார். அந்தத் தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். 
குடும்ப விவகாரம் தொடர்பாக பெஹேராவுக்கும் அவரது கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெஹேரா, அவரது 3 வயது மகள் பர்ஷாவை வீட்டுக்கு அருகில் உள்ள குளத்தில் மூழ்கடித்துக் கொன்றார்.

அதன்பின்னர், வீட்டுக்கு வந்த பெஹேரா, குழந்தை பர்ஷாவைக் கொன்றுவிட்டதாகக் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, குழந்தையின் உடலை குளத்திலிருந்து மீட்ட அவரது குடும்பத்தினர், இதுதொடர்பாக கௌகியா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பெஹேராவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரில், அவர் நேற்று (4.3.2018) கைதுசெய்யப்பட்டதாக இன்ஸ்பெக்டர் ஆஷிஷ்குமார் சாஹு தெரிவித்தார். மேலும், குழந்தையை பெஹேரா தூக்கிச்செல்லும்போது, அவரது கணவர் வீட்டில் இல்லை என்று தெரிவித்த ஆஷிஷ்குமார், அவர்  குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். குழந்தையைக் கொல்வதற்கு முந்தைய நாள், கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்னையால் ஆத்திரமடைந்த பெஹேரா, குழந்தையைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.