வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (06/03/2018)

கடைசி தொடர்பு:15:15 (06/03/2018)

`எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்!' - கோவா முதல்வர் பாரிக்கர் உருக்கம்

கோவா முதல்வர் உடல்நிலை சரியில்லாததால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று மூத்த
அமைச்சர்களைக்கொண்டு கோவாவின் ஆட்சி நடைபெறுகிறது.

கோவாவின் முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்
மீண்டும் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல
உள்ளார். அங்கு 6 முதல் 8 வாரங்கள் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் எனக் கூறப்படுகிறது. அவர், மேல் கிசிக்சைக்குச்
செல்லும் முன் தன்னிடம் உள்ள இலாக்காக்களின் பொறுப்புக்களை ஒப்படைக்க மூன்று மூத்த அமைச்சர்களைக்கொண்ட அவசர ஆலோசனைக்குழு நடைபெற்றது. முதல்வரின் மருத்துவ சிகிச்சை முடியும் வரை, அவசரக்காலங்களில்  ஏற்படும் அனைத்து அரசு முடிவுகளையும் இந்த மூன்று அமைச்சர்களுமே எடுப்பார்கள்.

மனோகர் பாரிக்கர் நாளை மாலை அமெரிக்கா செல்ல உள்ளதாக கோவா அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் அமெரிக்கா
செல்லும் முன் அனைத்து அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என அனைவருடனும்
ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்நிலையில், நேற்று கோவா முதல்வர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், `எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி, உங்களின் ஆசீர்வாதங்களால்தான் என் உடல்நிலை சீரடைந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறேன். உங்களின் தொடர் பிரார்த்தனையால் என் உடல்நிலை முற்றிலும் குணமடையும் என நம்புகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று தெரிவித்திருந்தார்.