லெனின் சிலை அகற்றம்... பெரியார் சிலைக்கு எதிர்ப்பு... பி.ஜே.பி.யினரை எச்சரிக்கும் கம்யூனிஸ்டுகள்!

லெனின்

ஷ்யாவில் பொதுவுடைமை ஆட்சியை நிறுவுவதற்குப் பெரும் காரணமாக விளங்கியவர் லெனின். மேலும், அவர் தொழிலாளர் வர்க்கத்துக்கான புதிய சித்தாந்தங்களையும் கையிலெடுத்தவர். இதன் காரணமாகவே அவருடைய சிலை உலக நாடுகள் பலவற்றிலும் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள திரிபுரா மாநிலத்திலும் லெனின் சிலை அமைக்கப்பட்டது. பிலோனியா என்ற இடத்தில் அந்தச் சிலை நிறுவப்பட்டது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருப்பதைக் கொண்டாடும் விதமாக 2013-ல் அந்தக் கட்சியினர் லெனின் சிலையை நிறுவினர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலில், ஐ.பி.எஃப்டி கட்சியுடன் கூட்டணிவைத்து ஆட்சியைப் பிடித்துள்ளது பி.ஜே.பி. வெற்றிபெற்ற கையோடு முதல் வேலையாக லெனினின் சிலையை அகற்றியுள்ளது, அந்தக் கட்சி. இதற்கு நாட்டில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

முத்தரசன்

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் இரா.முத்தரசன், "திரிபுரா மாநிலத் தேர்தலில் தங்களிடம் உள்ள மத்திய செல்வாக்கு, பணச் செல்வாக்கு, அடியாட்கள் செல்வாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி பி.ஜே.பி ஆட்சியைப் பிடித்துள்ளது. திரிபுராவிலிருந்த ஒரு நல்ல ஆட்சியைப் பி.ஜே.பி-யினர் தொடரவிடாமல் தடுத்துள்ளார்கள். அதுவும் மிகப்பெரிய அளவில் எல்லாம் வெற்றி பெறவில்லை. மிகக் குறைந்த அளவு வித்தியாசத்தில்தான் பி.ஜே.பி. வெற்றிபெற்றிருக்கிறது. குறிப்பாக, மத்தியில் அமைந்திருக்கும் ஆட்சியானது மனுதர்மத்தைக் கொள்கையாகக் கொண்ட ஆட்சி. எனவே, அவர்களிடம் நாம் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது. இதற்கான எதிர்விளைவுகளை நிச்சயமாக அவர்கள் சந்திப்பார்கள். லெனின் சிலை உடைக்கப்பட்டவுடன் பி.ஜே.பி-யின் அகில இந்தியச் செயலாளர் ஹெச்.ராஜா, 'தமிழகத்தில் இருக்கும் பெரியார் சிலையும் அகற்றப்படும்' என்று கூறியிருக்கிறார். அவர், இப்படிப்பட்ட கருத்துகளைச் சொல்லிச்சொல்லியே விளம்பரம் தேடிக்கொள்பவர். விளம்பரம் தேடிக்கொள்கிறோம் என்ற பெயரில் தடித்த நாக்கோடு அவர் தொடர்ந்து இதுமாதிரி பேசிக்கொண்டிருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை, பெரியாரின் சிலையை யார் அகற்ற வேண்டும் என்று சொல்கிறார்களோ... அல்லது அகற்ற முன்வருகிறார்களோ... அவர்கள்தான் முதலில் அகற்றப்படுவார்கள். பெரியாரின் வழிப்படியே ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்துவருகிறார். காரணம், இது பாலகிருஷ்ணன்பி.ஜே.பி-யின் அடிமை அரசு. அவர் இப்படிப் பேசிவருவதால் நிச்சயமாகச் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும். அப்படி, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு முழுப் பொறுப்பும் எடப்பாடி பழனிசாமிதான் ஏற்க வேண்டும்" என்றார்.

மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், "பலவிதமான தில்லுமுல்லுகளைச் செய்துதான் திரிபுராவில் பி.ஜே.பி-யினர் வெற்றியடைந்திருக்கிறார்கள். எங்கள் அரசுமீது ஊழல் குற்றச்சாட்டோ அல்லது முதலமைச்சர் மீது முறைகேடோ இல்லை. ஐ.பி.எஃப்டி என்ற இயக்கத்தோடு கூட்டணிவைத்து அவர்களின் ஓட்டுகளையும் கொஞ்சம் பெற்றுள்ளனர், அவ்வளவுதான். மோடி மற்ற ஊர்களில் இருக்கும் பிரிவினைவாதம், தீவிரவாதம் பற்றிப் பேசுவார். ஆனால், திரிபுராவில் தீவிரவாத இயக்கத்துடனயே கூட்டணி வைத்திருக்கிறார். அவர்கள் பணபலம், அடியாட்கள் பலத்துடன் வெற்றிபெற்றுள்ளார்கள். ஆனால், இன்னும் பதவிகூட ஏற்கவில்லை. அதற்குள் அங்கிருக்கும் எங்களுடைய அலுவலகத்தை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். லெனின் சிலையையும் அகற்றியிருக்கிறார்கள். அவர் எவ்வளவு பெரிய தலைவர். உலகத் தொழிலாளி வர்க்கத்தின் மிக உயர்ந்த தலைவர், அவர். லெனின் சிலை இருப்பதில் பி.ஜே.பி-யினருக்கு என்ன பிரச்னை? ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி. எவ்வளவு பெரிய வன்முறைக் கூட்டம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இனி, திரிபுரா மாநிலம் ஒரு தீவிரவாத மாநிலமாக மாறப்போகிறது என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டுதான் இது. இந்தச் சக்தியை நாம் அனுமதித்தோமானால், இந்தியா சிதறிப் போகும். பி.ஜே.பி. தலைவர் ஒருவர் பொதுக்கூட்டம் ஒன்றில், 'இந்திய ராணுவத்தால் செய்ய முடியாததைக்கூட எங்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் மூன்றே நாளில் செய்துவிட முடியும்' என்று கூறியிருக்கிறார். அப்படியென்றால் இது எவ்வளவு பெரிய வன்முறைக் கூட்டம் என்று பார்த்துக்கொள்ளுங்கள். இவர்கள் எப்படி அமைதியான இந்தியாவை உருவாக்குவார்கள்... மக்களை எப்படி அமைதியாக வாழவிடுவார்கள்" என்றார்.

லெனின் சிலை வேண்டுமானால் அகற்றப்பட்டிருக்கலாம். ஆனால், அவருடைய சித்தாந்தங்களை யாருடைய மனதிலிருந்தும் அகற்ற முடியாது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!